பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 9 (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:9 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchsolai blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--9
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
1. கவிஞர் வள்ளிமுத்து
சத்தியம் ஓங்க வேண்டும்
சமத்துவம் மலர வேண்டும்
எத்திசை நோக்கி னாலும்
இன்பமே ஒளிர வேண்டும்
உத்தமம் பெருக வேண்டும்
ஒற்றுமை மலர வேண்டும்
அத்தனை மாற்றம் தோன்றின்
அவனியை ஆளும் அன்பே.!

2. கவிஞர் தர்மா
பற்றிய தீங்கை நாமும் 
பாரினில் விரட்டி ஓட்டக் 
கற்றிட வேண்டும் வாழ்வில் 
கண்ணிய மென்னுங் கல்வி.
சுற்றிலு மெங்கும் சூழ்ச்சி 
சுதந்திரம் பெற்ற நாட்டில்.. 
ஒற்றுமை கொண்டால் நாமும் 
உலகினை வெல்ல லாமே..

3. கவிஞர் புனிதா கணேஷ்
அருங்குளம் சேரும் ஆம்பல் 
அருகிலே அல்லி பூக்கும் 
அரும்பிடும் இனிய கீதம் 
ஆங்குறை பட்சி யாவும்
அருக்கனின் வருகை கண்டே 
அழகுறும் மேகக் கூட்டம்
அருமையே காணும் யாவும் 
அகிலமும் திறக்கும் கண்கள்!

4. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
நஞ்சையில் பட்டுப் போன
நடவினைக் கண்டு நோகப்
பஞ்சமும் பற்றிக் கொள்ளப்
பாவியும் கதறி யேங்கி
நெஞ்சுமே அடைத்துக் கொள்ள
நேரமும் அவனைக் கொல்ல
தஞ்சையே உறைந்து போகத்
தரணியில் அழுகி றோமே.

5. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
கத்தியைத் தீட்டி டாமல்
கல்வியின் கூர்மை கொள்வோம்
சத்தியை ஊட்டி நம்மைச்
சத்திய வாழ்வில் ஆக்கும் 
புத்தியைத் தீட்ட வைத்துப்
புன்மையைப் போக்கச் செய்யும்
சித்தியாம் ஞானம் பெற்றால்
சீவனுக்(கு) இறப்பும் உண்டோ

6. கவிஞர் குருநாதன் ரமணி
நீரிடை யுறங்கும் ஏனம்
நிலத்திடை யுறங்கும் ஐயை
போரிடை யுறங்கும் மாடு
புழுதியில் உறங்கும் கோழி
ஏரிடை யுறங்கும் தேரை
எச்சிலில் உறங்கும் கேள்வன்
மாரிடை யுறங்கும் பிள்ளை
மங்கையுன் உறக்கம் என்றோ?

7. கவிஞர் சுந்தரராசன்
அப்பனே !முருகா! செந்தி
லாண்டவா! குமரா! வேலா!
சுப்பிர மணியா! கந்தா!
சொற்றமி ழிறைவா! யென்றே
வொப்பிலா வுன்பேர் சொல்லு
முவகையில் நாளு மாழச்
சுப்பனே! யருள்செய் வாயே!
சூரனை வதைத்த கோவே!

8. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
பூக்களுங் குலுங்குஞ் சோலை,
பூத்திடும் கனிகள் கண்டு,
பாக்களில் புகுத்திப் பாட,ப்
பாவலர் தமிழ்ப்பாச் சாலை;
ஊக்கமு மடைந்தே நானும்,
ஊரினி லுணர்ந்து பாடி,
ஆக்கிய கவிதை கொண்டே,
அண்ணலை வணங்கு வேனே! 

9. கவிஞர் சேலம் பாலன்
வசதியே இலைஎன் றாலும்
வறுமையே வாட்டு மேனும்
அசதியாய் இருந்த போதும்
அடுத்தவர் தூற்றி னாலும்
கசடரும் ஏசும் போக்கே
கண்டுதான் வாழ்ந்த போதும்
கசடிலாக் கவிஞ ருக்குக்
கவிதைதான் உயிரே மூச்சே .

10. கவிஞர் பொன்.பசுபதி
என்மனம் புகுந்த பெண்ணே
என்றுணை யானாய் நீயே
மண்ணிலே இருக்கும் போதும்
மாண்டுநாம் போகும் போதும்
என்னுளம் தன்னில் நீயும்
உன்னுளம் தன்னில் நானும்
ஒன்றியே வாழும் பேற்றை
உடையராய் வாழ்வோம் நாமே!

11. கவிஞர் விவேக்பாரதி
மாரியில் விழிக்கும் சிப்பி 
மாலையில் விழிக்கும் அல்லி 
போரிலே விழிக்கும் வீரம் 
பொய்யிலே விழிக்கும் தீமை 
நீரிலே விழிக்கும் வேர்கள் 
நீழலில் விழிக்கும் காளான்
காரிலே விழிக்கும் தோகை 
கவிதையில் விழிக்கும் கண்ணே ! 

12. கவிஞர் பரமநாதன் கணேசு
வலியிலா வாழ்வுக் காக
வளம்தனைச் சுரண்டு வோர்கள்
மெலியவர் வாழ்வை நாளும்
மிடியெனும் கூண்டி லிட்டுப்
பலியிடும் காட்சி கண்டும்
பதறிடா நெஞ்சத் தோரே
கலியுக கால மென்று
கண்டிடா திருக்கின் றீரே!!

13. கவிஞர் சோமுசக்தி
கள்ளமே யில்லா வெள்ளைக்
கமலமே போலும் உள்ளம்
வெள்ளமாய் அன்பு தன்னை
வேண்டிட மழைபோற் பெய்யும்
கொள்ளலும் நன்றே கூடிக்
குலவலும் நன்றே ஆங்கே
துள்ளலே எங்கும் போற்றும்
தூயநற் கொள்கை ஒன்றே !

14. கவிஞர் காளியப்பன் E.
வென்றிசேர் கல்வி யாலே, 
வெறுமையும் நீக்கப் பெற்று
நின்று,சீர் நிலைக்கக் கண்டு, 
நிலமிதில் உயர்வு காண்பார்
ஒன்றினைத் தேர்வார் என்றால், 
உண்மையில் மதுவைச் சார்ந்தார்,
என்றுமே நம்மை ஆள, 
இடங்கொடா திருத்தல் ஒன்றே!

15. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி
கட்டுடன் வாழ்ந்த நம்மைக் 
கலங்கிய குட்டை யாக்கி 
எட்டிடும் திக்கி லெங்கும் 
இத்தனைத் துயர்க ளோங்கத் 
திட்டமிட் டாரோ ஆற்றும் 
தீவினை மிகுவ தாற்றான் 
கட்டினை யிழந்து நாளும் 
கவலையா லுழல்கி றோமே !

16. கவிஞர் பாலு.கோவிந்தராஜன்
காலையில் உன்னைப் பார்த்தேன்.
கட்டுடல் கொண்டே நின்றாய்.
சோலையில் கொத்தாய் மொட்டாய்ச்
சொக்கியே ரசித்தேன் உன்னை. 
மாலையில் மெல்லப் பூத்தாய்.
மயக்கியே என்னை ஈர்த்தாய்.
மாலையில் தமிழன் னைக்கு
மனமுரு கிசூட்டி னேனே. !

17. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
ஊழ்வினை யதனை மாற்றி
உவப்புறச் செய்யும் கல்வி
வாழ்ந்திடும் வரையில் நம்முள்
வளத்தினை சேர்க்கு .மென்றும்
வாழ்வினில் நலமே பெற்று
வளத்துடன் சிறப்பாய் வாழ்ந்து
தாழ்விலr மனமே கொண்டு
தரணியைச் செழிக்கச் செய்வோம்

18. கவிஞர் சரண்யா விசுவநாதன்
கற்பக வல்லி நாதா
கற்பிதச் சூழை நீக்கு
சிற்பர குருவாய் வந்து
சிறப்புறச் செய்வாய் எம்மை.!
பொற்பதம் தன்னைத் தூக்கிப் 
பூமகன் என்மேல் வைப்பாய்
அற்புத மலர்க்கை நீட்டி
அடிமையை ஆட்கொள் வாயே!

19. கவிஞர் இரா.கண்ணன்
சாலையில் செல்லும் போது
சட்டென நின்றேன் நானும்
சோலையில் பூத்த பூவாய்ச்
சொக்கிடு மழகில் தேனாய்ச்
சேலையில் வந்து நின்றாள்
சிரித்திடும் முல்லைச் செண்டாள்
காலையி லவளைக் கண்டேன்
களிப்பினில் நீந்தி னேனே..!

20. கவிஞர் சியாமளா ராஜசேகர்
பிறையுடன் நதியும் சூடும்
பித்தனின் புகழைப் பாடி
முறையுடன் பக்தி செய்தால்
முக்கணன் விரும்பி யேற்று
நிறைமனத் தோடு வந்து
நிழலெனத் தொடர்ந்து காப்பான்!
இறையருள் கிட்ட நாளும்
ஈசனைத் தொழுவாய் நெஞ்சே!

21. கவிஞர் மகிழினி காந்தன்
கல்வியே கண்க ளாகும்
கருத்தினில் கொண்டால் போதும்
அல்லவை தீண்டி டாமல்
அறிவினா லதுவே காக்கும்
இல்லெனும் நிலைவா ராதே
இனியதாய் உயர்த்திக் காக்கும்
கல்வியில் லாதான் தன்னைக்
கண்டிடா நிலைகாண் போமே!

22. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
ஈசனின் மகனே யென்னை
இன்புறச் செய்தாய் நீயே
பாசமு மென்மேல் கொண்டு
பாங்குற வாழ்வைத் தந்தாய்
நேசமு முன்மேல் வைத்து
நெறியுடன் வாழ்வே னென்றும்
தாசனா மென்னை நீயும்
தரணியே போற்றச் செய்வாய்.

23. கவிஞர் மதுரா
நெஞ்சிலே அன்பு வேண்டும் - 
நினைப்பது நடக்க வேண்டும்
கொஞ்சிடப் பிள்ளை வேண்டும் - 
கொடுத்திடும் கருணை வேண்டும்
விஞ்சிடும் அறிவு வேண்டும் - 
விதைத்தது பலனாய் வேண்டும்
எஞ்சிய வாழ்வில் இன்பம் - 
எனக்குநீ யருள்வாய் அம்மே!

24. கவிஞர் சாமி.சுரேஷ்
யாரிட மன்பு வைத்தும்
எப்படிப் பழகி னாலும்
சேரிடம் வந்த போதில்
செல்கிற பயணி போலே
நாரிய எண்ணங் கொண்டோர்
நட்பினை நத்தி டாது
தேரியே கொள்ளல் வேண்டும்
தெள்ளிய அறிவி னாலே!

25. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
குழலிசை மயங்கிக் கேட்டேன் 
குவலயக் கண்ணன் நின்றான் .
மழலையின் வடிவம் கண்டேன் 
மனத்திலே பதித்துக் கொண்டேன் .
அழகனா மவனைக் கண்டே 
அனுதினம் துதித்துப் பாடச்
சுழன்றிடு முலக மென்னைச்
சுற்றியே பார்க்கும் தானே !

26. கவிஞர் இராசேந்திரன் க.அர.
எழுங்கதிர் இறங்கி வந்தே 
எழிலுடன் நிலத்தில் பாய 
விழும்பனித் துளியை மந்தி 
வியப்புடன் சாய்ந்து நோக்கத்
தொழுஞ்சிற கெடுத்துத் தும்பி 
தோழமை கொண்டே ஆட 
உழுநிலம் வணங்கி வந்தே 
ஓட்டினர் உழவர் ஏரை!

27. கவிஞர் உமாபாலன் சின்னதுரை
பாரெதிர் வந்த போதும் 
பாதக மான போதும்
நேரெதிர் நிற்றல் தானே 
நேர்படு வீர மாகும்
போரெதிர் நிற்க மாட்டார் 
போய்ப்புறம் பேசு மாறே
ஊரெதிர் வந்தே உண்மை 
ஓராதொ ளித்த தேந்தான்?

28. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
குத்துவாள் எடுக்கா தேயோர் 
கொலையது நிகழ்ந்த தின்று
கத்தையாய்க் கண்ட ரூபாய் 
கனவென ஆன தின்று
மொத்தமாய் பணமே மாயம் 
மோடியார் செய்த வித்தை
புத்துயிர் கொடுத்தார் என்றார் 
பொருளியல் மாற்றம் தானோ?

29. கவிஞர் நிர்மலா சிவராசசிங்கம்
கண்ணொரு காட்சி காணக் 
கையதை அழகாய்த் தீட்டும் 
கண்கவர் அழகு வண்ணம் 
காண்பவர் மனத்தை ஈர்க்க 
எண்டிசை மக்கள் போற்ற 
எழுதிடும் ஓவி யங்கள்
பெண்ணவள் அழகின் முன்னர்
பேசவும் தரமா காதே!

30. கவிஞர் முத்துக்குமார் பாலசுந்தரம்.
பிறந்தநாள் காணும் என்றன் 
பெறற்கருந் தோழா உன்றன்
பிறந்தநாள் பொன்னாள் ஆகப்
பெருமைகொள் நன்னாள் ஆகச்
சிறந்தநாள் இந்நாள் ஆகச்
சேர்ந்தவுன் துன்பம் எல்லாம்
பறந்தநாள் இதுவும் ஆகப்
பண்பொடு வாழ்த்து கின்றேன்!

31. கவிஞர் ரமேஷ்மாதவன்
திருமகள் மார்பில் கொண்ட 
தேவரின் தலைவன் உன்னை,
அருந்தவ முனிவர் போற்றும் 
அண்ணலே அமுதே உன்னை,
மருந்தென வந்தாய் இந்த 
மானிடப் பிறவிக் கிங்கே,
கருமணி உன்னை என்றும் 
காதலால் வாழ்த்து வேனே!

32. கவிஞர் ஃபர்சானா ரசீக்
தேவையை நிறைவு செய்யத்
தேனதாய்ப் பேசக் கண்டேன்
நாவதில் நஞ்சு தோய்த்து
நடித்திட நாளும் நொந்தேன்
தாவிடும் குணத்தால் இந்தத்
தரணியை ஏய்ப்பார் வெந்தேன்
பாவமே புரியும் மாந்தர்
பண்பட வேண்டுவேனே

33. கவிஞர் பாலமுருகன்
நதிகளின் நடையைப் போலே
நறுந்தமிழ்க் கரங்கள் பற்றி
மதியுறு கவிகள் செய்ய
மறுபடி பிறப்பேன் இங்கே!
விதியுறு சதியால் எம்மை
வெறுத்தவர் வியந்து நோக்கிக்
கதிகலங் கிடவே நல்ல 
கவினுறு கவிகள் செய்வேன்! 

34. கவிஞர் சுந்தரி தேவன்
அரும்பிய மலராம் என்றன் 
அருந்தவப் புதல்வன் தானே 
இரும்பத னுறுதி பூண்டு 
இனித்திடும் யியல்பை யேற்றுக்
கரும்பென சுவைக்கும் வாழ்க்கை 
கைவரப் பெற்றே என்றும் விரும்பிய தெல்லாம் கொண்டு 
விடியலாய் ஒளிர்வான் தானே
★★★

No comments: