பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 5 ....தொடர்ச்சி...


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:5 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய புலவர் #செந்தமிழ்ச்சேய் அவர்கள் உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchokai blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--5
(ஓரொலி வெண்டுறை.
18. கவிஞர் புனிதா கணேஷ்
அன்றில் போலென்றும் அன்பால் இணைந்தும் 
குன்றின் மேலோங்கும் குன்றமாம் இணையாய் 
வென்றிடு சிலம்பமோ வென்றிணை இருமனமும் 
என்றதே நலம்கொள் இன்காதல்!

19. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணின்
எதிர்வீட்டு சன்னலில் இருந்தே நீயென்னை ஈர்த்தாய்
சதிரென்னை மொத்தமாய்ச் சாய்க்க உன்னையே சார்ந்தேன்
புதிராய்நீ புன்னகை புரிந்தாய் புதிதாய்ப் பிறந்தேன்
விதியிதுவாம் காதலுக்கே விளக்கம் கொண்டேன்!

20. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
கண்கள் பேசுமோ கன்னியென் காதலின் மொழிகளை 
வண்ணம் சொல்லுமோ வஞ்சியென் கருத்தினில் நினைப்பதை 
எண்ணம் மாறுமோ ஏங்கிடும் என்னைக் ஏற்பாரோ 
எண்ணி மடிகிறேன் என்றுமே!

21. கவிஞர் ராசாபாபு
எண்ணிணேன் யார்நமக்கு ஏற்றதுணை யாகவேண்டும் எனையாள !
கண்ணானக் காதலனைக் கண்ணாரக் கண்டுவிட்டேன் இந்நாளில் ! 
மண்மீதில் அவனுடனே கைகோர்த்து வாழ்ந்திடுவேன் சத்தியம் 
எண்டிசையும் போற்றும்படி வாழ்ந்திடுவேன் பாரடி !!

22. கவிஞர் பரமநாதன் கணேசு
கட்டழகுக் கூந்தலிலே கட்டியெனைப் போறவளே நில்லு
மொட்டவிழும் வாயிதழால் மோகத்தை யூட்டியெனைக் கொல்லு
பட்டமென என்மனதும் பற்றியுனைப் பின்தொடர  என்றும்
விட்டதேனோ என்றறியேன் வெண்மதி யாளே!

23. கவிஞர் ரமேஷ் மாதவன்
தென்றல் வீசிடும் தென்னந் தோட்டந் தனிலே
கன்னி யவளின் காதல் மொழியைக் கேட்க
இன்றே நானும் இங்கேக் காத்து நின்றேன்
அன்பாய் வருவாள் அணைக்கத் தானே! 

24. கவிஞர் பொன்.பசுபதி
கண்ணால் பேசி காதல் சொன்னாய் கனியமுதே
முன்னால் வந்து முடிவைச் சொன்னால் முகிழ்வேனே
என்னால் மேலும் ஏங்கித் தவிக்க இயலாதே
இன்னே வருவாய் இசைவை பகர்வாய்! 

25. கவிஞர் அய்யப்பன்
முத்தொள் ளாயிர முறுவல் செய்தாள் காதலாள்
அத்தனை அளந்தாள் அத்தான் என்று காதலால் 
பித்த னானேன் பேரிட ரென்ன காதலா ?
அத்தனை இன்பமும் பாடுவேன் பாடலாய்! 

26. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
கண்மலர்ந்தாள் காதலினால் பேசும் சொல்மறந்தாள் 
பெண்மலர்ந்தாள் பேதையவள் பாடும் பண்மறந்தாள் 
எண்மறந்தாள் எழுதிவைக்க ஏட்டை மறந்தாள்..பெண் 
வண்ணநோயைக் கொண்டாள் வருந்தி! 

27. கவிஞர் சுந்தரராசன்
எண்ணமெலாம் ஏகி இதயமெலாம் தானாகி
வண்ணமெலாம் தானாய் வருவதெலாம் தன்னுருவாய்ப்
பண்ணிலெலாம் மேவிப் பருவமெலாம் காட்சிதரும்
கண்ணிலுள்ள பாவாய்க் கருதெனையே!
★ 
28. கவிஞர் E.காளியப்பன்
வாங்கிடுவாய் புத்தகங்கள் வளர்வதற்கே அதுவுதவும் புத்தி
தூங்கிடுமோ என்றபயம் தொற்றாது காதலியைப் பார்த்தே
ஏங்காதே நாள்கழியும் ஏதிழப்பும் இருக்காது கண்முன்
பூங்காக்கள் எழுத்தாகப் பூத்திருக்கும்! காதலியேன்!

29. கவிஞர் நாகினி கருப்பசாமி
காத்திருந்து வரும்வழி கானலாகும் நேர மெல்லாம்
ஆத்திரமும் விழிவழி ஆறுகளும் பொங்கி வந்து 
சாத்திரத்தில் கெடுதியின் சாயலெனக் காத லையும்
பாத்திகட்டி நிறுத்தவும் பார்க்குதென் மனமே! 

30. கவிஞர் சுந்தரி தேவன்
நிதஞ்செய்யும் சிறுசெயலில் நிறைந்ததுவே மனமுணர்நற் காதலே 
இதந்தரும்கு றுநகையொடு யினிமைமிகு ரசனையுடன் ருசிக்குதே
பதம்நிறைந்த மதிப்பினிலும் பண்ணிசைத்து மகிழ்ச்சியுனுள் திளைக்குதே
மதமில்லாக் களிறதுபோல் மனமதுவும் நிறையுதே.!

31. கவிஞர் வள்ளிமுத்து
முள்ளுண்டு சுரசுரத்து முக்கனியில் உள்ளினிக்கும் பலாப்போல்
கள்ளுண்டு மெல்லிதழிற் காவலுக்கோ கத்தியொத்தக் கண்ணுண்டு
புள்வண்டு புசிப்பதற்குத் தடைகண்டு பயந்தொளிந்து பறப்பதுண்டோ
கள்ளுண்ணும் காதல்தேன் கொள்வேன்நான் களித்து

32. கவிஞர் அழகர் சண்முகம்
கன்னியெழில் கட்டவிழ்க்க விளையாடும் மானிரண்டும் நோக்கக்
கன்னலொடு கனிச்சாறு கலந்தூறும் செவ்விதழும் ஈர்க்க
மின்னலென வெட்டுகிற மெல்லிடையு மென்மனத்தைத் தாக்கக்
கன்னத்துக் குழிகளுக்குள் கால்தடுக்கி வீழ்ந்தேனே!

33. கவிஞர் பாலமுருகன்
நுனிப்புல் தவம்செய்தேன் நூறாண்டு வாழ்ந்திட;
இனியேனுந் தருவாயா? இன்ப வரமொன்று;
கனியா மனங்கொண்ட காரிகையே நானிங்குத்
தனியே தவிக்கின்றேன் தாராய்!

34. கவிஞர் அர்ச்சனா குருநாதன்
அன்னக் கொடியழகேஅருகம்புல் வனப்பழகே ரதியே;
எண்ணமெலாம் ஏந்திழையே ஏனடிசெய்கின்றாய் சதியே;
வண்ணமலர் வாசனையாய் நாசிவழி அகம்சென்ற மதியே
கன்னல்மொழிக் காதலாக இனிக்கின்றாய் நின்று.!!
★★ ★

No comments: