பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

11 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 3 (நேரிசை வெண்பா.)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:3 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 
இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய புலவர் செந்தமிழ்ச்சேய் சின்னசாமி அவர்கள் உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchokai blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--3

(நேரிசை வெண்பா.)
1. கவிஞர் சேலம் பாலன்.
தமிழே பயிலும் தகுமொழி யாகத்
தமிழர்நம் நாட்டிலே சட்டம் - அமிழ்தெனக்
கட்சிஎல் லைகள் கடந்தே அனைவரும்
இட்டமாய் ஏற்றால் இனிது.!

2. கவிஞர் வள்ளிமுத்து
வெள்ளத்தில் வீழாதாம் வெந்தழலில் வேகாதாம்
கள்ளத்தால் யாரும் கவரவொண்ணாப்- பள்ளத்தில்
வீழ்ந்தவர்க்கும் வாழ்வில் விழியெனவே தாமிருக்கும்
தாழ்ந்தவரேற் றும்கல்வி தாம்..!

3. கவிஞர் ரமேஷ் மாதவன்
மருத்துவம் மற்றுமந்த வானசாத்தி ரத்தின்,
கருத்தைநாமும் தாய்மொழியில் கற்போம் - வருந்தாமல்,
பெற்றிடலாம் நாமும் பெருமைகளை அத்துறையில்,
கற்போம் தமிழ்வழி கண்டு! 

4. கவினப்பன்
எட்டக் கிடப்பவற்றை யெய்துவிக்கும் ஏணியென்றே
நட்ட நடுவீட்டில் நாட்டோமே - யொட்ட
வொதுக்கியோர் ஓரம் ஒடுக்கிப்பின் னிட்டு
மிதித்ததில் ஏறுவமே மேல்!

5. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
தாய்மொழிச் செந்தமிழ் தன்னில்யான் கற்றகல்வி
வாய்மொழி யாயொலிக்க வந்திடும் - சேய்மொழி
மாயமில்லை செஞ்சொல் மறையுமில் லைஉண்டோ
ஆயகலை எட்டெட்டு மாங்கு ? 

6. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
செந்தமிழை நாளும்நாம் செப்பிட வாழ்வினில் 
விந்தைகள் கிட்டும் விரைவாக - எந்நாளும் 
தெள்ளுதமிழ்க் கல்வி தெளிவாகக் கற்றாலே 
உள்ளம் நிறையு முவந்து .!

7. கவிஞர் சுந்தரராசன்
தாய்மொழியிற் கல்வியதைத் தாம்பயிலும் மாணவர்கள்
ஆய்ந்தறிவ ருட்பொருளை ஆவலுடன் - காய்ந்த
விறகெளிதாய்ப் பற்றும் விதம்போலே! ஆகப்
பிறமொழியிற் கல்வியேன் பேசு?

8. கவிஞர் காளியப்பன் E.
முந்தைப் பழமொழியின் மூத்த பெருங்குடியைக்
கந்தைத் துணிபோற் கடிந்திட்டோம் – வந்தடைந்த
ஆட்சியின் பின்னதையே ஆட்சிமொழி ஆக்கினமோ,
வேட்சி தமிழ்படிக்க வென்று?

9. கவிஞர் சோமு சக்தி
கற்பாய் தமிழ்வழியில் கண்டுயர் நல்வாழ்வும்
கற்பனை அல்லவெனக் காட்டுவாய் – மற்றிங்கே
அற்றவர் ஆற்றலையும் அற்புதம் ஆக்கிடுமே
அற்றே அவர்மொழிபால் அன்பு! 

10. கவிஞர் ராசா பாபு
எண்ணெழுத் தெல்லாமே ஏராளம் பெற்றிடலாம் 
கண்ணாம்நம் தாய்த்தமிழில் கண்டிடுவாய் _ மண்மொழியாம்
வண்டமிழைப் பாரதில் வார்த்திடுவாய்! கற்கண்டாம் 
தண்டமிழ்க் கல்வியதைத் தந்து!

11. கவிஞர் விவேக் பாரதி
கம்பன் கவியமுதைக் காப்பியனின் தொன்னூலை
அம்புவி போற்றும் அருமறையைச் - செம்புலவர் 
செய்த தொகைநூலைச் சேக்கிழார் காவியத்தைத் 
துய்த்துத் தமிழைத் துதி ! 

12. கவிஞர் பொன்.பசுபதி
தமிழ்வழிக் கல்வி தமிழர்க் கிலையேல்
தமிழைப் பிறமொழி தாக்கி - அமிழ்க்கும்
தமிழ்மொழி தாழின் தமிழினம் சாயும்
தமிழா எழுந்தே தடு.!

13. கவிஞர் வீ.சீராளன்
செழுந்தாது போலொளிரும் செம்மையறங் காக்கும் 
எழுவாயாம் எம்மொழிக்கும் ஆன்றோர் - வழுவாமல் 
காத்திட்ட வண்டமிழைக் காமுறுவோம் ! பற்றுடனே 
தோத்திரம் செய்வோம் தொடர்ந்து !

14. கவிஞர் புனிதா கணேஷ்
தென்பொதிகை தான்தோன்றித் தேன்பொதி பாவிலெலாம் 
தென்றலதாய் வீசுமொரு தீந்தமிழாம் - தென்னவன் 
மன்றதில் மாற்றானு மேங்கிடு மாண்பதில் 
இன்றமி ழானதே இன்று! 

15. கவிஞர் தர்மா
எம்மொழிக்கும் செம்மொழியாம் எம்மொழி! இம்மொழியை 
இம்சிக்கும் வம்பரை இம்சிக்க - எம்முடன் 
கம்புடனோ, அம்புடனோ கம்பரே எம்பிடுவார் 
வம்பிழுக்கும் வம்பரே நம்பு..!

16. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
நற்றமிழ்ச் சொல்தான் நலந்தரும் நல்லமுதாம்! 
சொற்றமிழ் காட்டுவிக்கும் சோதியாம்! - நற்கல்வி
நெஞ்சில் மறவாது நிற்க அருளாகும்!
செஞ்சொல் புழங்குதல் சீர்!

17. கவிஞர் கண்ணன் இரா.
அறிவை வளர்த்திடும் அன்னை மொழியே!
அறிவோம் பயில்வோம் அதனில் - செறிவாய்
இருந்தது சிந்தையை ஈர்க்கும்; உலகை
கருத்ததில் வெல்லுமே கல்! 

18. கவிஞர் நிர்மலா சிவராசா
தந்தை விருப்பம் தமிழ்க்கல்வி என்பதால் 
வந்தனை சொல்லி வரவேற்போம் - விந்தையான. 
என்றன் மொழியாம் எழில்மிகு முத்தமிழ். 
என்றும் மகிழ்வளிக்கும் இங்கு! 

19. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
கன்னித் தமிழில் கணினி அறிவியல் 
இன்னும் வணிகம் இயற்பியல் - என்னதான் 
இல்லை தமிழில் இயம்புவீர் நற்றமிழில் 
எல்லாமே கற்றிடலாம் இன்று!!

20. கவிஞர் பாலமுருகன்
அன்னை மொழிகேள்! அயல்மொழியில் ஆவலேன்?
முன்னைத் தமிழினில் மோகங்கொள்- தன்னை
உயர்த்திக்கொள் தாளாதே உள்ளத்தால்; என்றும் 
துயரில்லை கொள்வாய் துணிபு!

21. கவிஞர் கனகரத்தினம் செல்லமுத்து.
எம்மொழிக்கும் முன்னோடி இந்தத் தமிழ்மொழி 
செம்மொழி யாகிச் செழிப்புறுமே இம்மொழி 
நம்மொழிக் கல்வியினால் நாமாள்வோம் சீரோடு 
தெம்பெனவே நீயிதைத் தேர்! 

22. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
தமிழன் தமிழ்படித்தால் தன்மானம் போமென்
றமிழ்தவளைத் தள்ளிஆங்கி லத்தில் - அமிழ்வாரே
தேன்சுவையிற் குன்றாத தென்மொழியைத் தேடிட்டால்
வான்மழைபோற் கூடும் வணங்கு! 

23. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி
பற்பல வாகவே பல்மொழி கற்றாலும் 
நற்றமி ழாலேநீ நாநனைத்துச் - சுற்றமும் 
சூழவு ளோருமாய்த் தூய்தமிழ்க் கற்றிடத் 
தாழவேதா ழாதெம் தமிழ் !

24. கவிஞர் பாலு கோவிந்தராசன்
சொத்தாகும் செம்மொழி சொக்கத் தமிழ்மொழி
வித்தாகும் வாழ்வில் விளக்காகும்-- கொத்தாகும்
சித்தாகும் மேன்மை சிறப்பாகும் வாழ்விலே
முத்தமிழைக் கற்றலே மூச்சு.

25. கவிஞர் நடராஜ் மெய்யன்
பாட்டுக்குள் சங்கதியாய்ப் பால்நிலவின் பொன்னொளியாய்
நாட்டுப்பெண் ணாடுகின்ற நாட்டியமாய்க் – காட்டுப்பூங்
கோட்டைக்குள் கட்டியுள்ளக் கூட்டுத்தேன் கிண்ணத்தை
நீட்டுந் தமிழ்த்தாய் நமது.!

26. கவிஞர் ஃபர்சானா ரஷீக்
நற்றமிழ் கற்றல நாகரிகம் என்றே தான்
குற்றமது கூறும் குலத்தினை முற்றுமாய்ச்
சிட்டாய்த் திரிந்தேனும் செந்தமிழ் கற்றிட
நட்டமெது முண்டோ நவில்.!

27. கவிஞர் குருநாதன் ரமணி
தாய்மொழிக் கல்வியைத் தாயகத்தில் பேச்சுறும்
வாய்மொழியாய்க் கையில் வருமொழியாய் - ஆயும்
உளத்தில் இருமொழியாய் ஓச்சிக் குழந்தை
வளர்த்தலே பெற்றோர் வரம்! 

28. கவிஞர் உமா பாலன் சின்னதுரை
தமிழ்வழி கற்றார் தரணியை வென்றார்
அமிழ்வழி தள்ளார் அறிவர் - சிமிழ்தனில்
சேர்ப்பரோ சேற்றை? செழுந்தமிழ் சேராதே
ஓர்வரோ கல்வியை ஒத்து!

29. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
எந்நாளும் நம்வாழ்வி லேற்றமது சேர்ந்துவரு
மிந்நாளும் நன்னாளா யின்பமாகும் - சிந்தித்து
நம்மொழியாம் செந்தமிழில் நம்தமிழர் கற்றுநாளும்
செம்மாந் திருத்தல் சிறப்பு! 

30. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
செந்தமி ழுன்னிலே செம்மையாய்க் கற்றாலே
நந்தமிழர் நெஞ்சினிலே நற்பெயரும் - வந்திடுமே
அந்நியரின் வாய்மொழிக் கஞ்சாமல் கற்றுநாம்
சிந்தனையில் வைப்போம் சிறப்பு.!

31. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
கற்றிடக் கேட்டிடக் கைப்பொருள் தீராதே
சொற்றிற முற்றிடும் சோர்வின்றி_குற்றமில்
தாய்மொழிச் செல்வம் தமிழ்வழிக் கற்றிட
நீயும் உறுதியாய் நில்.!

32. கவிஞர் கணேசன் ராமசாமி
தனிமனிதன் சிந்தித்தல் தாய்மொழியி லேயாம்
மனிதர்க்கு கல்வியே மாண்பாம்-இனிதாம்
தமிழே நமதுதாய் தந்தது கல்வி
தமிழா லமைந்தால் தரம்! 

33. கவிஞர் பரமநாதன் கணேசு
அடுத்தவன் தாயை அணைத்தது போதும்
விடுத்திடு வாயே விரைந்து – கொடுத்திடத்
தாய்த்தமிழ் கல்வியைத் தானெழில் சூழவே
வாய்த்திடும் நல்வாழ்வும் வந்து.!

34. கவிஞர் சியாமளா ராஜசேகர்
இன்பத் தமிழிருக்க ஏன்வேண்டும் வேறொன்று?
கன்னித் தமிழிலே கற்றிடுவாய் ! - அன்புடன் 
உள்ளங் குளிர உயர்தனிச் செம்மொழியை 
அள்ளிடக் கூடும் அறிவு .!

35. கவிஞர் கே.அ. தாரா. பி. கேசவன்
தேனினும் மிக்கநல் தேன்தமிழ்ச்சு வையறிந்து
தேனியாய்ப் பாடலைத் தேடிடும்-மானிடா
அண்டை மொழியறிந்தும் அன்னைத் தமிழ்வழிப்
பண்பொடு கல்வி பயில்!

36. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
நற்றமிழில் கல்விதனை ஞாலமுடன் கற்றாலே
சொற்கள் பொருளுடன் சூடமதில் - ஏற்றுகிற
தீப்போல ஏறிடுமே செம்மையாய் மூளையிலே
நாப்ப ழகிடும் நமக்கு.

37. கவிஞர் சுந்தரி தேவன்
இயலிசையும் தானுண்டே எம்மொழியில் தானே,
நயமான நாடகமும் நன்றாய் - பயமேன்,
அயல்மொழிஇ யல்கள் அருந்தமிழில் ஏற்றிப்
புயத்தால் புவியைப் புரட்டு!

No comments: