பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு 25 (வஞ்சி விருத்தம்)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:25 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் 
http://painthamizhchsolai.blogspot.com/?m=0
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--25
(வஞ்சி விருத்தம்)
தலைப்பு : இயற்கையைக் காத்தல்
1. கவிஞர் அர.விவேகானந்தன்
வாடு மியற்கை வளம்நிறையின்
நாடும் நன்றாய் நலம்பெறுமே!
தேடும் வாழ்வும் சிறந்திடநற்
பாட மிதுவே பகுத்தறிவோம்!

2. கவிஞர் குருநாதன் ரமணி
மலையின் அழகில் மகிழ்வேதான்
வலைநீர் அருவி வனப்பன்றோ
தொலையும் துயர்கள் சோலையிலே
நிலத்தோ டுயிர்நீர் நிலைகாப்போம்.

3. கவிஞர் வ.க. கன்னியப்பன்
மாத மூன்றில் மழைபெய்து 
பேத மின்றி பயிர்பேணின் 
தாது பொன்னாய் தான்நிறையும் 
வீத லென்றும் நமக்கிலையே! 

4. கவினப்பன் தமிழன்
மருங்கிலே வாழ்ந்தார் அன்று
கரம்பையும் வளர்த்தார் நன்று
பெருநகர் வரைந்தார் பின்று
சுரண்டிமண் பிழைப்பார் இன்றோ.

5. கவிஞர் விவேக்பாரதி
வானமே நமக்குக் கூரை 
ஞானமே வளர்த்தோ மென்றால் 
தானதைக் காத்தல் வேண்டும் 
கானகம் செய்வோம் நாமே ! 

6. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
கயல்கள் ஓடும் கால்வாய்கள்
வயலில் நெல்லை வளம்படுத்தும்
பெயல்நீர் பெய்யப் பெரிதுழைத்தால்
இயற்கை அன்னைக் கெழிலாமே!

7. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
சுற்றுச் சூழல் பாதுகாத்தல்
முற்றும் நம்மின் கடமையாகும் 
பற்றும் செயற்கை வேண்டாமே 
குற்ற மன்றோ உணர்வீரே !!

8. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
ஆடா ஆட்ட மெலாமாடிக்
கேடாய் வளரும் மாசுகூட்டிக் 
கூடாச் செயலெ லாஞ்செய்யு(ம்) 
மூடா, நீவீழ்ந் திடுவாயே !

9. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
மண்ணில் தோன்றும் மனிதரெலாம்
கண்போல் புவியை தினம்மதித்தே
எண்ண வியலாச் செயல்புரிந்தால்
மண்ணி லுயிரும் தழைத்திடுமே.

10. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
இயற்கை தனையே பேணிடுவோம்
உயர்வாய் வாழ்வைப் பெற்றிடவே
இயல்பு கொண்டு காத்திட்டுச்
செயற்கை தனையே ஓட்டிடுவோம்

11. கவிஞர் வள்ளிமுத்து
மாடுழுத நிலமெல்லாம் மனையாகின
காடுகளும் கடிதிறந்து நகராயின
நாடுகெட நமக்கெனவென் றிரலாகுமோ
ஏடுகளில் கவிப்புரட்சி எடுத்தோதுவீர்!

12. கவிஞர் ரகுநாதன் ரங்கசாமி
வேட்டை ஆடி வனமழித்துக் 
காட்டை அழித்துக் களராக்கும் 
சேட்டை என்று செயலிழக்கும் 
கேட்டில் இயற்கை கொழித்திடுமோ?

13. கவிஞர் நெடுவை இரவீந்திரன்
காடாய் இருந்த கழனியைநான்
ஓடாய் ஒடுங்கி ஒழுங்கமைத்து
வாடா மரத்தை வளர்த்துவந்தேன்
நாடும் வளங்கள் நல்கியதே.!

14. கவிஞர் புனிதா கணேசு
நின்று நிழலாய்ப் பசுமரங்கள்
என்றும் தருமே உயிர்க்காற்று
நன்றி மறந்தே நறுக்கலாமோ 
கொன்றே இயற்கை அழிவாக்கும்! 

15. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
வீட்டில் குப்பை வீசாமல்
காட்டில் மரங்கள் கழிக்காமல் 
நாட்டில் வளங்கள் நலியாமல்
பாட்டில் இயற்கை பகர்வோமே

16. கவிஞர் சோமுசக்தி
வள்ள லியற்கை வரம்தந்த
அள்ளக் குறையா அருஞ்செல்வம்
கள்ளத் தனமாய்க் கழிக்காமல்
வெள்ளை உளத்தால் விரிவுசெய்யே !

17. கவிஞர் சத்தார் முகம்மது ஆசாத்
வெட்டி மரங்களை வீழ்த்தாமல்
கட்டி யாள்வோம் காடுகளை
மட்டி மடையர் செய்யுங்கால்
குட்டி நெறியைப் போதிப்போம்!

18. கவிஞர் தங்கமணி சுகுமாரன்
நடுநெல் மருதம் நெய்தலது
கொடுங்க டலதூஉ குறிஞ்சிமலை
தொடுவான் காடு தொல்முல்லை
சுடுமண் பாலை துதிப்போமே! 

19.கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
வரமென முன்னோர் எண்ணிய
மரங்களை எல்லாம் வெட்டியே
நிரந்தர மாக மாரியை
விரட்டுதல் வேண்டா என்பனே!

20. கவிஞர் அழகர் சண்முகம்.
நாடும் வீடும் நலம்நிறையக்
காடும் கடலும் கதிர்வயலும்
ஓடும் நதியும் உயிரெனனாம்
பாடும் கவியால் பறையொலிப்போம்

21. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்
காடும் நதியும் காத்திடுங்கள்
நாடும் விதியை ஏற்படுத்தித்
தேடும் புதிய தேசமதைக்
கூடும் வழியில் பெற்றிடுங்கள்

22. சியாமளா ராஜசேகர்
காடு கரையை அழித்துவிட்டு
வீடு கட்ட விழையாமல்
பாடு பட்டுப் பயிரிட்டால்
கேடு நீங்கிப் பிழைத்திடலாம்!

23. கவிஞர் பொன்.பசுபதி
இயற்கை வளத்தை யேற்றாமல்
செயற்கைப் பொருள்கள் சேர்த்திடவே
மயக்கில் விழுந்து மதியிழந்தே
இயற்கை நலன்கள் இழப்பதுவோ?

24. கவிஞர் கோவிந்தராஜன் பாலு.
மண்ணின் வளங்கள் மங்காமல் 
கண்போல் வளர்த்தால் காடுகளைத்
தண்ணீர் தருமே மேகங்கள்
கண்ணீர் துடைத்துக் காத்திடவே.

25. கவிஞர் கே.செந்தில்குமார்
காடே நமக்குக் கண்ணாகும் 
கூடின் மூச்சு மதுவாகும் 
நாடே தவிக்கு மஃதழிந்தால் 
பாடு பட்டுக் காப்போமே! 

26. அஷ்ஃபா அஷ்ரப் அலி
வீட்டைக் கட்ட விழையும்நாம் 
காட்டை வெட்டிக் களிக்கின்றோம்
வாட்டம் கொண்ட வருணன்தன்
பாட்டுக் கெம்மைப் பகைக்கின்றான் !

27. கவிஞர் தர்மா
இயற்கை வளத்தை இகழ்ந்தழித்துச் 
செயற்கை தானே சிறப்பென்றால் 
துயரம் வருமாம் இயற்கையைநாம் 
இயன்ற வரையில் காத்திடுவோம்

28. கவிஞர் பரமநாதன் கணேசு
வேற்றுத் திசையார் விருப்பிற்காய்
காற்றில் மாசைக் கலப்பதுவும்
சோற்றில் நஞ்சைச் சேர்ப்பதுவும்
ஏற்பா ரிலையென் றெழுவோமே!

29. கவிஞர் நாகினி கருப்பசாமி
மண்ணரிப்பு தடுக்கும் மரங்கள் 
அண்மையிலே இருந்தால் அமைதி
திண்ணமாக வருமே தினமும்
உண்மையறிந் துவிதை ஊன்று!

30. கவிஞர் நடராஜ் மெய்யன்
போடும் விதையில் விருட்சம்வர 
ஓடும் நதிகள் பெருக்கெடுத்து 
நாடு வளமாய் இருப்பதற்குக் 
காடு செழித்தல் அவசியமே 

31. கவிஞர் சாமிசுரேஷ்
பல்லுயிர் பெருக்கத்துப் பசுமையின்கண்
நல்லுயிர் செழித்தேபார் நலம்பயக்கும்
செல்கிற வழியெல்லாம் செடிவளர்ப்போம்
கொல்கிற வெயில்சூடு முறியடிப்போம்

32. கவிஞர் இரா.கண்ணன்
வாட்டும் வெம்மை உலகினையே
ஆட்டும் வறட்சி உயிரினையே
காட்டை அழிக்கும் கயவரினை
நாட்டை விட்டே விரட்டிடுவோம்

33. கவிஞர் தன்ராஜ் பாப்பண்ணன்
கவலைப் பட்டுப் பயனேதோ,
திவலைக் கின்று ஏங்குகிறோம்!
புவனம் செழிக்க வேண்டுமெனில்,
கவனம் மழைநீர் சேமிப்போம் !
★★★★★

No comments: