பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

11 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 2 (குறள் வெண்பா.)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:2 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 
இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchsolai blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--2

(குறள் வெண்பா.)
1. கவிஞர் வள்ளிமுத்து
கண்ணே.! கனியமுதே.! கற்கண்டே.! உன்னால்தான்
பெண்ணேயென் காதலுக்குப் பீடு..!

2. கவிஞர் சேலம் பாலன்
தக்கபடி யார்க்கும் தருமுதவி எந்நாளும்
சிக்கலிலும் சேர்க்கும் சிறப்பு!

3. கவிஞர் தர்மா
உழைத்திங்கு வாழும் உழவரை ஏய்த்துப் 
பிழைத்திங்கு வாழ்தல் பிழை...!

4. கவிஞர் சீனிவாச கோபலன் மாதவன்
அன்புடைப் பாலகனை ஆட்கொண் டுணர்த்தியமாற்
பண்பினைப் பாங்குடன் பாடு! 

5. கவிஞர் பாலு கோவிந்தராசன்
பாட்டெழுதும் பாவலரின் பைந்தமிழ்ச் சோலையில் 
நாட்டமுடன் கற்றல் நலம்.!

6. கவிஞர் ரமேஷ் மாதவன்
அரிதின் அரிதாம் அறிவை அடையக்
கரிமுகன் பாதமே காப்பு!

7. கவிஞர் விவேக் பாரதி
வெட்டிப் பொழுதாலே வெற்றிபோம் தேவைகளை 
எட்டிப் பறிக்க எழு !

8. கவிஞர் கணேசன் ராமசாமி
சோலைக் குயிலவள் சொக்கும் இசையமுதம்
மாலை பருகும் மது!

9. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
தரமில்லாக் காட்சிகளில் தங்கிவிட வேண்டா
மரமொன்றை நட்டிடலே மாண்பு.!

10. கவிஞர் நடராஜ் மெய்யன்
இல்லாதோர் கண்டே இருப்போர் கொடுத்துதவி 
அல்லல் களைதல் அறம்.!

11. கவிஞர் முத்துகுமர் பாலசுந்தரம்
அல்லாவாய்த் தேவபிதா வாய்ப்பிரம்ம மாய்மற்றும்
எல்லாமாய் ஏய்க்கும் இறை! 

12. கவிஞர் புனிதா கணேசு
நற்றமிழை நல்லபடி நாட்டமுறச் சோலையிலே 
நற்றிறமாய்க் கற்றிடுவோம் நாம்!

13. கவிஞர் வீ.சீராளன்
நாவினிக்கப் பேசும் நறுந்தமிழே ! உன்னடியான் 
பாவினிக்கச் செய்வாய் படர்ந்து !

14. கவிஞர் பொன்.பசுபதி
எண்ணாத எண்ணமெலாம் எண்ணியெண்ணி ஏங்குகிறேன்
கண்ணான காதலியைக் காட்டு!

15. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
உள்ளத்தில் வாய்மை ஒளிர்ந்திட வெல்லலாம்
கள்ளம் கருகும் கனிந்து!

16. கவிஞர் சியாமளா ராஜசேகர்
ஏரகத் தேவனும் ஏற்ற மருளிடுவான் 
சீரகத் தோடவனைத் தேடு .!

17. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
அன்பாய் விளங்கு மருவுருவே
எந்நாளு மின்பத்தைக் காப்பா யினிது!

18. கவிஞர் பாலமுருகன்
காதல் கனிந்து கரம்பற்றும் நல்லுயிரைச்
சாதலில் தள்ளுஞ் சதி!

19. கவிஞர் கனகரத்தினம் முரளிதரன்
எண்ணமே வாழ்வென வெண்ணும் மனிதர்க்கே
விண்ணென வாகுமாம் வாழ்வு!

20. கவிஞர் மகிழ்நன் மறைக்காடு
மதுதரும் போதை மயங்கியதில் வீழ்ந்தால்
அதுதரும் பாதை அழிவு.!

21. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி
இல்லா தவரைக்கண்( டு ) ஈயா திருப்பார்க்குச் 
சொல்லாம லேகரையும் சொத்து!

22. கவிஞர் ராசாபாபு
பெற்றெடுத்த தாயே பெருந்தெய்வம்
பாரினில் மற்றவர் ஈடாகா தார்.!

23. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
உள்ளம் களிகொள்ளும் ஊரெல்லாம் பாராட்டும்
தெள்ளியநற் றேன்தமிழைப் பேசு.!

24. கவிஞர் குருநாதன் ரமணி
இருப்பென வொன்றே இதுவே பலவாய்
உருத்திடத் தோன்றும் உலகு.!

25. கவிஞர் காளியப்பன் .E
அடுப்பினுள் சூடுபோல் ஆம்,உன் நினைவு!
விடுத்தகலாப் பூனை மனம்!

26. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
அமிழ்தென வந்தா யறமதைச் செய்தாய்
தமிழே புரிவாய் தயை.!

27. கவினப்பன் தமிழன்
அரிதின் விளங்கும் எளிமை யமைந்த
பெருமை யுடைத்திப் பிறப்பு.!

28. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
வரமாகிப் போகின்ற வாழ்க்கை விதியால் 
தரமாக மாறும் தழைத்து!

29. கவிஞர் சுந்தரராசன்
ஈயைப் பருந்தாக்கும் இன்றமிழ் பாரதியின்
தீயை நிகர்த்ததமிழ் தேறு!

30. கவிஞர் சுந்தரி தேவன்
ஆக்கத்தோ டூக்கம் அறிந்தவர் வாழ்க்கையில்
ஏக்கமே என்றும் இல!

31. கவிஞர் ஃபர்சானா ரசீக்
ஈட்டியாய்ப் பாய்ந்தே இதயம் கிழிக்கின்ற
வாட்டும் செயலை மற!

32. கவிஞர் கே.அ. தாரா. பி.கேசவன்
காலையும் மாலையும் காதல் பிரிவின்நோய் 
சோலையில் வாழ்ந்தாலும் சோர்வு! 

33. கவிஞர் சோமு சக்தி
பாரா ஒலிம்பிக்கில் பார்போற்ற சாதித்தார்
பாராய்நீ பாரதமே பாடு!

34. கவிஞர் கனகரத்தினம் செல்லமுத்து
தலைவிரி கோலமாய்த் தாய்நதி தீயோர் 
அலையா லமர்ந்த திழுக்கு !

35. கவிஞர் நிர்மலா சிவராசா
வேதனை வந்துற்றால் வீணே சலிக்காமல்
சாதனை செய்து தகர்!

36. கவிஞர் குறளோவியன் கல்லார் அ.சாத்தப்பன்
' திருக்குறள் நூலைத் திருமறையாய்த் தந்த
பெருமாசான் வள்ளுவரைப் பேண்.!

37. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
எளிய மொழியா மெமது தமிழு
மெளிதா யறிய வழகு!

38. கவிஞர் அய்யப்பன்
வா!மனனே பிள்ளை வடிவக் குறள்வடிவாம்
வாமனனைக் கண்டு வணங்கு!
★★★

No comments: