பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு 17 (கலித்தாழிசை)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:17 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் 
http://painthamizhchsolai.blogspot.com/?m=0
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--17
(கலித்தாழிசை)
1. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
தழைத்தும் வளரும் தனியால் மரம்போல்
உழைத்தும் உயர உழவன் உழுவன்
மழையும் பொழிய மரமும் வளரும் 
வளமும் பெருகி திருவும் வளரும்.!

2. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
ஆசிகள் தந்திட்ட ஆசான் பெருமைகள் 
கூசிட வேண்டாம் குறித்தே உரைக்கவும் 
மாசுகள் நீக்கிட மண்ணை வணங்குவோம் . 
மாற்றங்கள் காண மனிதம் வணங்குவோம் .

3. கவிஞர் சுசீந்திரன் சுப்பிரமணியன்
பாரழகு பாரின் புலமழகு பைந்தமிழர்த்
தேரழகு தேரில் தெரியும் சிலையழகு
யாரழகு போட்டியில் யாவருமே சேர்ந்தழகு
யாழிசையாள் யென்னவளை யான்தொட்டுத் தீண்டுமுன்னே!

4. கவிஞர் சங்கத் தமிழ்வேள் தமிழடிமை
எருதைத் தழுவிடு மெந்தமிழர்ப் பொங்கல் 
திருநாள்தா னின்றோ துருநாளாய் வஞ்சக் 
கிருத்துருவத் தீர்ப்பால் கருகியதால் நாமே 
ஒருமித்தப் போரை யொழுங்காய்ப் புரிந்தே 
உருப்படுத்தி வெல்வோ மொழுங்காய்ப் புரிந்தே!!

5. கவிஞர் குருநாதன் ரமணி
மாலையில் காலாற்ற வான்பார்த்துக் கால்நடந்தேன்
சாலையில் ஏதேதோ சார்ந்தோடும் மக்களினம்
ஓலையில் கீறெழுத்தாய் உள்ளத்தில் ஓர்கவிதை
. ஓயா தொலிப்பதில்கால் ஆங்காங்கே நிற்குமே!

6. கவிஞர் ரமேஷ் மாதவன்
வையகத்தை அளந்தபின்னே வானகத்தை அளந்தபின்னே,
கையதுவும் வலித்ததுவோ காலதுவும் வலித்ததுவோ,
துய்யப்ப ரம்பொருளே துயில்கொள்ள வாராயோ சுடராழி 
சங்கோடு துயில்கொள்ள வாராயோ!

7. கவிஞர் சோமுசக்தி
ஆண்டொன்று போய்வரவே அகக்கண்ணைத் திறக்கும்
ஆண்டவரின் அடிமையரின் அறிதுயிலை நீக்கும்
ஆண்டகதை மாண்டகதை அவணியிலே மீண்டகதை
ஆணென்ன பெண்ணென்ன ஆறடிக்குள் பூட்டும்! 

8. கவிஞர் பொன்.பசுபதி
எனையீர்த்த பெண்ணே இனியென்றன் நெஞ்சில்
உனைக்கண்டு துய்ப்பேன் உயிருள்ள மட்டும்
மனமொன்றி விட்டால் மனம்செய்து வாழ்வோம்
மகிழ்வெய்தி என்றும் மனம்போல வாழ்வோம்.!

9. கவிஞர் தர்மா
உணவைக் கொடுப்பார் உழவ ரவரின் 
உணர்வைக் கெடுத்தால் உருவாகும் துனபம்..! 
உணர்வோ மிதையினி ஒவ்வொரு நாளும் 
உழவரைப் போற்றுவோம் ஒவ்வொரு நாளும் ...

10. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
கெடுவழிகள் வேண்டாவே, கேட்டிடுவாய் நெஞ்சே ;
சிடுசிடுக்குங் 'கோபங்கள்' தீமைதானே, வேண்டா(ம்) ;
சடுதியினில் செய்தசெயல் தாராதே நன்மை,
...தடுமாறும் சிந்தனையில் வாராதே நன்மை !

11. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
மனிதா மனதில் மகிழ்வே நிறைய
இனிதா முலகி லினியவை தங்கப்
புனிதம் நிறைந்து புதுமைக ளோங்கிட
பூக்கட்டு மென்றுமே ஈகை உலகில்

12. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
இயற்கை யதனின் இனிமையைக் காக்க
இயல்புடன் நாமும் இயன்றதைச் செய்வோம்
இயந்திர வாழ்வை இனிமேல் தவிர்த்தே
இயற்கை வழியை ஏற்றிடு வோமே! 

13. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
சிதறுகின்ற வார்த்தைகளால் சீர்தலைத லாகிப் 
பிதற்றுகின்ற பாக்களினால் பேரின்ப மின்றிப் 
பதறுகின்ற தாய்த்தமிழைப் பாங்குடன்கை கோர்த்தால் 
பவனிவரு வாளவளோ பாவரிகள் தோறும் !

14. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்.
கண்ணின் மணியாகிக் காட்டிடும் பாசத்தில் 
மண்ணில் வளர்கின்றாள் மாதரசி என்மகளாய்
வண்ணக் கனவுகளில் வாழ்கிறாள் என்மகள்
வடிவழகு பண்போடு வாழ்கிறாள் என்மகள்!

15. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
மனத்தினை வாகனமாய் மாற்றிடலாம் மைந்தா!
இனத்திலே இன்பாய் இருந்திடலாம் இன்னும்!
வனத்திலே வாழாது விண்ணுலகை மண்ணில்!
மகிழ்ந்தே மறைப்பொருளாய் வந்ததை எண்ணில்!

16. கவிஞர் பாலமுருகன்
குறுமதியால் நாடாளுங் கூட்டமதை மாய்ப்போம்
வறுமையினால் விண்ணேகும் வாழ்ந்தகுடி காப்போம்
சிறுமையினால் நேர்மைதனை சேர்ந்த ழிக்கும்
சீரிழந்த உழவர்தம் இன்பமதை காப்போம்! 

17. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்
நற்குண நெஞ்செல்லாம் நஞ்சாய் நிறைவதைப்போல் 
நெற்குவியல் கண்ட நிலமெல்லாம் கற்குவியல்
பொற்குவியல் தந்திட்டப் போகபூமி விட்டோமே 
பொன்னாசைப் பெற்றதைப் புண்படுத்தி விட்டோமே

18. கவிஞர் கோவிந்தராசன் பாலு
வறுமையில் வாடுவோர் வாழ்க்கையில் மாற்றம் 
பெறுவதும் எப்போது பேரிடர் நீங்க 
உறுபசி நீங்கி உழைப்பின் பயனை
உழைப்போர் பெறவே உழைப்பின் பயனே!!

19. கவிஞர் வள்ளிமுத்து
நாடெல்லாம் என்பெயரை நாளெல்லாம் சொல்லிடவே
மாடெனவே நீயுழைத்தாய் மற்றும் பலபொருட்கள்
கேடில்லா வாழ்வுமுறைக் கேள்விபல அத்தனைக்கும்
ஈடில்லா உன்வாழ்வால் என்பாதை செம்மைசெய்தாய்
என்வாழ்வை மேலேற்ற என்வாழ்வைச் செம்மைசெய்தாய்!

20. கவிஞர் இரா.கண்ணன்
தமிழுக்கென்(று) ஆண்டுமுறைத் தரணியில் உண்டென்று
தமிழர(து) ஆண்டுமுறை தைத்திங்கள் தொடக்கமென்(று)
இமியளவும் குறையாத இலக்கண முறைகொண்(டு)
இனிதளித்தார் பெரியோர்கள் இதையின்(று) அறிவோமே...!

21. கவிஞர் மெய்யன் நடராஜ்
பொதுவுடைமைக் கொள்கையெனப் பொய்சொல்லிக் நாட்டில் 
இதுவரையில் ஏய்த்திருந்த ஏமாற்றுக் காரர் 
மதுக்கடைகள் செய்தெங்கள் மக்களினை சாய்த்தார்
மயக்கிட்ட எம்மக்கள் மதுவாலே சாய்ந்தார்!

22. கவிஞர் சாமி சுரேஷ்
நெஞ்சினில் வஞ்சமேந்தி நேரினில் காட்டிடாது
கொஞ்சிடும் வஞ்சியர்போல் துஞ்சிடும் கேண்மியரை
நஞ்சினைப் போலஞ்சி நாடாமை யழகே
நாகரீக பஞ்சுமன நல்லோர்க் கழகே!

23. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
நறுமல ருள்ளிருந்து நாள்பாதி போக்கிப்
பொறுமையுடன் தூங்கிநிதம் போதவிழ்பின் ஏழும்
சிறுவண்டாய் ஆனச் சிறுவனா மென்றன்
சிரந்தாழ் வணக்கங்கள் சீரிய ஆன்றோர்க்கே !

24. கவிஞர் சியாமளா ராஜசேகர்
பாவலரின் சோலையிலே பாக்கள் மலர்ந்திடும் 
ஆவலுடன் அள்ளிடவே ஆர்வம் மிகுந்திடும் 
சேவகமே நோக்கமென செய்பவர் வாழியே 
தேன்தமிழைக் கற்பிப்பார் சீருடன் வாழியே !

25. கவிஞர் நாகினி கருப்பசாமி
கண்ணெடுத்தும் பாராமல் கல்லாக நிற்கின்ற
மண்ணுலகில் சொந்தமாய் மாற்றமாகும் பந்தமும்
அண்மைக்கா லந்தனில் அன்பற் றுறவிழக்கும்
அந்தோ மானுடம் அந்தோ வலுவிழக்கும்! 

26. கவிஞர் இதயம் விஜய்
மாதுளைப் பூமேனி மானொன்று நெஞ்சத்தில் 
மாதுளை யொன்று மலர்விழியால் போட்டுவிட்டு 
மாதவன் செய்திடும் மாயங்கள் போலென்றன் 
மாதவம் கொண்ட மனத்தினை வென்றாளே
மங்கை மலரிதழ் முத்தொன்று தந்தாளே! 

27. கவிஞர் அய்யப்பன்
பயிர்வாடக் கண்டு பதைக்கின்ற நெஞ்சத்
துயிர்வாடக் கண்டும் உறங்கிற்றோ காலம் ?
மயங்கமால் காக்கும் மனுநீதி யேனும்
மழையாகப் பெய்ய மனுவாமென் பாட்டே

No comments: