பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 13 (எண்சீர் ஆசிரிய விருத்தம்)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:13 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் 
painthamizhchsolai.blogspot.com
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--13
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
1. கவிஞர் தர்மா
ஏழ்மையினை மாற்றிடுவோம் உழைப்பால் இங்கே... 
ஏற்றமுற வாழ்ந்திடுவோம் இணைந்தே நாமும்.. 
தாழ்ந்தவரென் றாருமில்லை மண்ணில் தானே 
தரம்பிரித்தே வைத்ததெல்லாம் மனிதன் தானே.. 
வீழ்ந்தவரைத் தேற்றிடுவோம் கரங்கள் தந்தே.. 
வெற்றிகளும் பெற்றிடுவோம் விரைவில் சேர்ந்தே.. 
வாழ்ந்திடலா மெவ்வழியு மென்பர் மூடர்.. 
வாய்மைவழி செல்லாத வாழ்வும் வீணே...

2. கவிஞர் முத்துக்குமார் பாலசுந்தரம்
ஓடுபாதை தன்னில்வான் ஊர்தி மெல்ல
உயரவெழும் பிப்பறத்தல் உள்ளி னால்கை
கூடுவதோ எதிர்த்துவரும் காற்றி னால்தான்
குனியாதீர் எதிர்க்கிறவர் கூட்ட மாகச்
சாடினாலும் எள்ளிநகை யாடி னாலும்
தளராமல் நிமிர்ந்துநின்று தன்னம் பிக்கை
யோடுநன்றாய்த் தாம்தெளிந்த செயல்கள் தம்மை
உறுதியுடன் மேற்கொண்டே உயரு வீரே!

3. கவிஞர் நியாஸ் அசன் மரக்காயர்
அண்டங்கள் முழுவதையும் அழகில் தேய்த்தே 
அம்சத்தில் படைத்திடுவான் வல்லோன் ஐயன்
வண்ணங்கள் தெளித்ததிலே மாயம் செய்யும் 
வணக்கத்திற் குரியோனாம் வல்லோன் ஐயன்
நுண்ணறிவில் படைத்ததனில் பாறைக் குள்ளே 
நுணலுக்கும் உணவளிப்பான் வல்லோன் ஐயன்
திண்ணமவன் தூயோனாம் தீர்ப்பின் நாயன்
திரும்பிடுவோம் அவனிடத்தில் தூய்மை பெற்றே

4. கவிஞர் இரா.கண்ணன்.
எள்ளிடுவார் நல்லவரை யென்று மிங்கே
ஏற்றிவிட்ட ஏணிதனை உதைப்பார் போலே
முள்ளெனவே தைக்கின்ற வார்த்தை யாலே
முக்காலும் முழங்கிடுவார் மூச்சைப் போலே
பள்ளமது பறித்திடுவார் பழகி வந்தே
பாசாங்கு வேலைகளை அறியோம் நாமே!
கள்ளமனம் கொண்டோரைக் காண்போ மிங்குக்
காய்த்தமரம் கல்லடியை வாங்கும் தானே...!

5.கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
மாமரத்துப் பூக்களுமே மாறும், பச்சை
மாவிலையில் மறைந்துவரு மாங்கா யென்றே,
தேமதுரச் சுவைதாங்கித், தேனும் சேரும்
தேர்ந்தெடுத்த உயரிடத்தில் கட்டுங் கூட்டில் !
சாமரத்தின் சுழல்வீச்சில், தரமாய்க் காற்றுஞ்
சரியாக வந்திடுமே, அதுபோல், மேலோன்
நாமமும்நா மொலித்திடவே, நமக்கும் நன்றாய்,
நல்லதுவே யென்றென்றும், நடக்கு மொன்றே !

6. கவிஞர் பரமநாதன் கணேசு
காட்டிடுவோம் எம்பலத்தைப் பாரில் எங்கும்
கயவரழி பட்டோடிக் கலக்கம் கொள்ளத்
தீட்டிடுவோம் பலதிட்டம் தீரத் தோடு
திக்கெட்டும் வெற்றிதனைப் பரிசாய்ப் பெற்று
நாட்டிடுவோ எம்மொழியின் மேன்மை யிங்கு
நாளையிங்குக் கோடிவெற்றி தானாய்ச் சேர
ஊட்டிடுவோம் தமிழ்மொழியைக் களித்தே யுண்ண
ஊரெல்லாம் பள்ளிகளைக் கட்டி வைத்தே!

7. கவிஞர் விவேக்பாரதி
கோணாமல் குறுகாமல் குனிந்தி டாமல்
. குணமிலவை சொல்லாமல் குழைந்தி டாமல் 
நாணாமல் நடுங்காமல் அஞ்சி டாமல்
. நலியாமல் உளறாமல் பிதற்றி டாமல் 
வீணாக அலையாமல் விழைந்தி டாமல்
. வித்தைகற் றோமென்று கணைத்தி டாமல்
தூணாகத் துடுப்பாகப் படிக்கட் டாகத் 
. தோன்றுசக்தி யைப்போற்றென் பேதை நெஞ்சே ! 

8.கவிஞர் அரவிந்த் கார்த்திக்
தாய்மையினைப் போற்றிடுவோ மென்றும் வாழ்வில்
தாங்கிடுவோம் சாற்றிடுவோ மதனை நாமும்
தூய்மையான வாழ்வதனைத் தந்தா யன்பே
துயிலுறங்கச் செய்தாயே யென்று மென்னை
வாய்மையையே யென்வாழ்வி லேற்றிட் டென்றும்
வலிமையுறச் செய்திடுவா ளென்று மன்னை
நோய்களுமே யண்டாமல் காப்பா ளென்னை
நோகாம லென்வாழ்வை மாற்றி னாளே! 

9. கவிஞர் கோவிந்தராஜன் பாலு
கடவுளாக நெஞ்சினிலே கண்டேன் தாயே.!
காலமெல்லாம் போற்றிடுவேன் கற்கண் டாக.!
திடம்நிறைந்த மனத்துடனே தியாகம் செய்வாய் 
திறமையாக வளர்த்தாயே ! திண்மை யூட்டி
நடந்திடவே கைகளையே நன்றாய்ப் பற்றி 
நலமிகுந்த கதைகளையே நாளும் சொல்வாய்.!
கடந்ததம்மா காலங்கள் கண்முன் ஓடிக்
காத்திடுவேன் கலங்காமல் கண்ணாய் நானே.!

10. கவிஞர் E.காளியப்பன்
வைகறையின் கதவுகளைத் திறந்து மெல்ல 
வருகின்ற விடியலென வளமை யே!வா! 
செய்முறையை உயர்வாக்கச் சேர்ந்து தோன்றும் 
சிந்தனையின் விடியலெனக் கல்வி யே!வா! 
பொய்முறைகள் சேராத புகழின் பாதை 
போட்டுழைக்கும் அரசியலே! புறப்பட் டே!வா! 
மெய்யுறவின் விழிப்பூட்டி மெலிந்தோர் ஏற்றம் 
மிகப்பெறவே சுதந்திரத்தின் விடிய லே!வா! 

11. கவிஞர் நாகினி கருப்பசாமி
எட்டெடுத்து நடந்துவந்த என்றன் தேவி
என்றுமினி நல்வரமாய் என்னுள் நீயே
கட்டிவைத்தப் பெரியோர்கள் கருத்தை ஏற்றுக்
கண்ணியமாய் ஒன்றிணைந்து கனிவாய் வாழ
இட்டமுடன் உறுதியாக இன்னல் தாங்கி
இல்லறத்தை நல்லறமாய் இமயம் போலே
மட்டிலாமல் உயர்த்துகின்ற மனித ரென்று
மண்ணுலகில் நிலைத்திருப்போம் மதிப்பில் நாமே!

12. கவிஞர் சியாமளா ராஜசேகர்
அகத்திலன்பு பெருக்கெடுக்க அமைதி கிட்டும் 
அகந்தைமுற்று மழிந்திடவே ஆற்றல் கூடும்!
பகலிரவாய் உழைப்பதனால் பலனும் சேரும் 
பசிப்பிணியும் பறந்தோடிப் பழுதைப் போக்கும்!
புகழுடனே நற்பெயரும் பொலிவாய்ப் பூக்க 
புரிந்திடுவாய் நன்மைகளைப் புவியில் நாளும் !
சிகரமெட்ட முயற்சிதனைச் சிரமேற் கொண்டால் 
சிறப்புறுமே செயலனைத்தும் தெளிவாய் நெஞ்சே !

13. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
செய்யினிலே ருழதவெனை வலையில் தேடிச்
சீர்செய்து தமிழிலிலே திரும்ப வைத்தாய்.
மெய்யோடு முயிரோடு முயிர்மெய் யோடு
மேன்மையுடன் தீந்தமிழைப் படிக்க வைத்தாய்
செய்யுளையும் கற்கவைத்துச் சிறப்போ டென்னைச்
சீர்சேர்த்துக் கவிதையினைத் தொடுக்க வைத்தாய்
மெய்யாலே உன்னையும்தான் வரத ராசா
மேதினியும் உள்ளவரை வணங்கு வேனே.

14. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
உள்ளவரைப் போட்டிடுவார் வேடம் இன்னும் !
உயிர்போன பின்வேடம் கலைத்து நிற்பார்!
உள்ளமதும் எதிராக மாற்றம் ஆச்சு! 
ஒன்றுபட்டோன் நிலைமாறும் செயலும் ஆச்சு! 
கள்ளமில்லா மனமெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து
கால்கடுக்க மரியாதை செய்ய லாச்சு!
பள்ளமுண்டு மேடுமுண்டு வாழ்வில் அன்றோ!
பாரினிலே இதையறிந்தால் தேர்வாய் நீயே! 

15. கவிஞர் பொன்.பசுபதி
தூண்டிலிலே சிக்கியதோர் கயலைப் போலே
துடிக்கின்றேன் நின்பார்வை வீச்சி னாலே
மீண்டுமுனை நோக்குங்கால் மின்னல் போலே
. மெல்லியளே மரத்தின்பின் . மறைந்தே நின்றாய்
வேண்டியதைச் சொல்லிடுவாய்  விரைவாய் என்றன்
வேதனையைப் போக்கிடுவாய் . விழைவைச் சொல்வாய்
சீண்டியெனைக் கொல்லாதே! சிலையே! மானே!
சீச்சீஏன் நாணுகிறாய் நெய்தல் பெண்ணே! 

16. கவிஞர் சுந்தரராசன்
கோவிலெலாம் தேடிவிட்டேன் கண்டேன் இல்லை!
குழுவுடனே திசைதொழுதேன் ஓர்ந்தேன் இல்லை!
பாவியரே வாருமிங்கே என்றே சொன்னப்
பாதிரியைப் பின்தொடர்ந்தும் பார்த்தேன் இல்லை
மேவிடுபல் மதவழியில் தேடிப் பார்த்தும்
மேதினியில் இறைவடிவைக் காணா தோர்பூங்
காவினிலே தனிமையிலே மனத்துள் ஆழக்
கண்டுகொண்டேன் கடவுளையே நெஞ்சுக் குள்ளே!

17. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்.
முகநூலில் மலர்ந்திட்ட நட்பெல் லாமும்
முன்னதாக அறிந்திராத உள்ள மேதான் 
அகச்சோலை வனத்துக்குள் வந்த சுற்றம் 
அடையாளம் காட்டியது தங்கள் அன்பைப்
புகழ்மாலை சூட்டிடுவார் கருத்து தந்து 
புதிதாக இணைந்திட்ட நண்பர் எல்லாம் 
முகநட்பு வெகுதூரம் உறவாய்ச் செல்ல 
முழுநிலவாய்க் குளிரூட்டி ஒளிரும் நட்பே

18. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
இப்பாரில் மக்களினம் சிறப்பாய் வாழ
இன்னலேதும் நேராம லினிமை தங்க
எப்போதும் விலக்கிடுவோம் பகைமை தன்னை
எந்நாளு மிப்புவியில் நலமே சேரும்
இப்போதே முயன்றேநா மன்பை நாளும்
இனிதான விதையாக விதைத்தே வாழ்ந்தால்
தப்பாது மனிதநேயம் தழைத்தே நிற்கும்
தரணியிலே மனிதஇனம் செழித்தே வாழும்

19. கவிஞர் சுசீந்திரன் சுப்பிரமணியன்
அப்பனில்லா தவனவனாம் அம்பாள் மேனி
அழுக்கான தெப்பத்தில் வந்திட் டானாம்
சுப்பனுக்கும் உடன்பிறப்பாம் சுடர்கற் பூரன்
சூழ்வினைக ளறுத்தாட்கொள்  பவனாம் சொல்லில்
அப்பழுக்கற் றவனவனாம் அருள்மு கத்தில்
அறிவொளியில் ஒளிர்பவனாம் அருகம் புல்லான்
எப்பொழுதும் வேதத்தில் எளிதில் வென்றே
இருப்பானின் தாள்போற்ற இடுக்கண் போமே! 

20. கவிஞர் சாமி.சுரேஷ்
பரிதியினைக் கண்கொண்டு பார்த்த பின்னே
பகலிங்கே வந்ததென்று நம்பல் வேண்டா
கரங்களினால் மலமள்ளிச் சுவைத்த பின்னே
கார்ப்பென்றும் புளிப்பென்று மறிதல் வேண்டா
உரமுடைய நெஞ்சத்தார் உள்ளந் தன்னை
உரசிப்பார்த் தேயறிந்து கொள்ளல் வேண்டா
சிரமுடைய யாவருமுன் சிந்தை செய்தால்
சிரமங்கள் வாழ்வினிலே இல்லை தானே?!.

21. கவிஞர் முனைவர் பாஸ்கரன்
வாசிக்கும் வழக்கத்தைப் பேணி வந்தால்
வாழ்க்கையினை வளமாக்கக் கற்றுக் கொள்வாய்
ஓசித்துக் காரியத்தில் இறங்கிச் செய்யும்
உயர்பண்பை இதயத்தில் இறக்கி வைக்கும்
பாசிப்போல் படர்ந்திருக்கும் குழப்பம் யாவும்
படிப்பாற்றின் புதுப்புனலால் மறைந்தே போகும்
நேசிக்கும் நண்பனாக நெருங்கி நின்று
நெஞ்சமெல்லாம் வாசிக்கும் பூக்கள் பூக்கும்

22. கவிஞர் ரமேஷ் மாதவன்
பக்தியுடன் வேண்டுகிறேன் பாவம் நீங்கப் 
பரந்தாமா காத்திடுவாய் பக்தன் என்னைச்
சக்தியின்றித் தவிக்கின்றேன் சலனம் நீங்கச்
சாரங்கா அழித்திடுவாய் சலனம் தன்னை,
முக்தியதும் கேட்கின்ற மூடன் நானே
முகுந்தாநீ ஏற்பாயே உன்னுள் என்னை,
துக்கங்கள் அத்தனையும் தொலைந்தே போகத்
தூயவனே என்றென்றும் துணைதான் நீயே!

23. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
வண்ணமணி மாலைகளை அணிக ளாக்கி,
வாசநறுஞ் சந்தனமாய்த் தென்றல் சேர்த்துக்
கண்மணிக்கும் மேலான கவிகள் பூட்டிக்
கன்னலொடு தேனூறும் கனிகள் தந்தாய்
விண்ணிலுள மீன்களெனப் பொருள்கள் கொண்டு
வீதியெங்கும் பாமணக்க வைத்த உன்னை
மண்ணுயிர்கள் எந்நாளும் மகிழ்ந்து போற்றும்
மாசற்ற சங்கத்தாய் மகிமைப் பூவே !

24. கவிஞர் ஜாய் சத்தியா
காட்டினிலே வளர்கின்ற நெல்லிக் காயும்
காண்!கடலில் பிறக்கின்ற உப்பு தானும்
தோட்டமதில் கிடைக்கின்ற மிளகாய் சேரத்
தோன்றுசுவை ஊறுகாயாய் ஆதல் போலே
நாட்டினிலே மொழியதனில் நாமெல்லோரும்
நாலுபுறம் இருந்துவந்தோம் என்ற போதும்
வீட்டிலுள்ளோர் போல்முகநூல் தனிலே கூடி
வேறுபாடோ ஏதுமின்றி நட்பா னோமே 

25. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
மாற்றங்கள் மகத்துவமாய் மண்ணில் வேண்டும் . 
மாசற்றத் தமிழ்மொழியே பேசல் வேண்டும் .
போற்றுங்கள் நெஞ்சத்தில் பொலிவு வேண்டும் .
போதிப்போ மென்றென்றும் தமிழே வேண்டும் .
சாற்றுங்க ளெல்லோரும் மொழியை எங்கும் 
சமுதாயம் நலன்வேண்டின் காத்தல் நன்றே .
ஏற்றங்க லெத்திக்கும் தங்கும் நாட்டில் .
எப்போதும் வணங்கிடுவோம் தாயே என்றே !

26. கவிஞர் கேக்கிரவ
வெற்றுரைகள் போக்கிடுவோம் வையம் தன்னில்
வேண்டிடாத சண்டைகளைத் தள்ளி வைப்போம்
ஒற்றுமையை நாட்டிடவே உழைப்போ மென்றும்
ஒருவருக்கும் தீங்குதனை நாடா வாழ்வோம்
தற்பெருமை வேண்டாவே சிறுமை பூண்டு
தக்கபணி செய்தேநாம் வாழ்வோ மென்றும்
கற்றதனைச் செய்கைதனில் கொண்டே நித்தம்
காசினியில் நல்வாழ்வை தோற்று விப்போம்.

27. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி
வையத்தில் வாழ்வாங்கு வாழ்வோர் போலேன் 
வாணாளைக் கழிக்கின்றீர் வாரீர் ! கேளீர் 
மையத்தில் நமைநோக்கும் மரணம் தன்னை 
மறக்கின்றீர் மகிழ்கின்றீர் மாயை ! நாளும் 
கையம்பே யில்லாமல் இறைவன் மேலேன்
கணக்கின்றி வாழ்கின்றீர் ! கவலை மாண்டால் 
ஐயந்தான் ! அவனன்பைக் கொண்டார்க் கேதான் 
அடையுமிடம் அழகுபெறும் அமைதி யங்கே !

28. கவிஞர் பாலமுருகன்
உலகமெலாம் ஊழலதும் ஒழிதல் வேண்டும்
உண்மைதனை யாவருமே பேசல் வேண்டும்
கலகமின்றி எல்லையெலாம் கடத்தல் வேண்டும்
கானகத்தை யழிக்காமல் வாழ்தல் வேண்டும்
சிலகாலம் வாழ்ந்திடநல் புவிதான் வேண்டும்
சிலம்பொலிபோல் சிரிக்கின்ற சேயும் வேண்டும்
பலகலைகள் நாம்கற்றுத் தெளிதல் வேண்டும்
பாரெங்கும் நறுந்தமிழைப் பரப்ப வேண்டும்! 

29. கவிஞர் .க. அர.இராசேந்திரன்
வைகறைதன் வாழ்த்துகளை வழங்கி நிற்க 
வருகின்ற கதிரோனும் ஒளியைப் பூச 
வைகையுமே தனித்துவத்தை வனப்பில் கொட்டி 
வாசமிடும் கதிர்மணியில் இசையை மீட்ட 
மைகரையக் கலயமதை இடையில் கொண்டு 
மையலவள் விழிமொழியின் அசைவில் வாட்டத் 
தைகனிந்து கண்ணிறைய அவளைக் கண்டு 
தவித்தேனே கழனியதை நான்ம றந்தே...!

30. கவிஞர் சேலம் பாலன்
சாதனைகள் செய்வதாகச் சட்டம் போட்டார்
சார்ந்தவரும் மற்றவரும் பாராட் டிட்டார்
வேதனைகள் மிகுசிக்கல் எளியோ ருக்கே
விரும்பிடும்நல் இயல்புநிலை எவர்க்கு மில்லை
ஆதரித்தோர் பலருந்தான் அமைதி யாக
அவரவரும் வாய்த்திறக்கா திருக்கின் றார்கள்
சோதனைதான் இக்காலம் இருண்ட காலம்
சொல்லாமல் இருப்போர்கள் நினைக்கின் றாரே!

31. கவிஞர் குருநாதன் ரமணி
காடெல்லாம் சிறகடித்துப் பறந்த தேனி
கண்டதெல்லாம் தேனென்று நஞ்சைக் கொள்ளும்
வாடாத மலரொன்று மனத்தின் உள்ளே
வற்றாத தேனூறும் இன்பக் கேணி
நாடோறும் நலிவேறும் மனம்கொள் மேனி
நாடகமாம் மாயையென அறிவான் ஞானி
பாடெல்லாம் இன்னுமொரு பிறப்பாய் ஆகிப்
பட்டறிந்தும் உயிர்காணாக் கொள்ளும் ஊனே.

32. கவிஞர் புனிதா கணேஷ்
கானகங்கள் அழித்தின்று கவலை இன்றிக் 
கருத்தற்ற மானிடரோ கலைப்பார் கூடும் 
கானகங்கள் ஒழிவதனால் காட்டில் பெய்யும் 
காலமழை பொய்த்ததென்று கடிந்து பாடு 
கானகமே அகமகிழக் குரலில் பாடு 
கார்முகில்கள் செறிந்துமழை கனமாய்ப் பெய்யக் 
கானகத்தே கூடிழந்து கானம் பாடும் 
கருங்குருவி காணீரோ கருணை இல்லீர் !

33. கவிஞர் சுந்தரி தேவன்
வாழ்வென்றால் தாழ்வுண்டு வருத்தம் ஏனோ 
வருத்தத்தில் தோய்வதனால் ஆக்க மென்ன 
தாழ்வொன்று கண்டாலும் தயக்க மின்றித்
தடைக்கல்லைப் படிக்கல்லாய் மாற்றிக் கொண்டால் 
பாழென்று பறைசாற்றி யலையும் மாந்தர் 
பார்த்துன்னை வியப்பாரே பையச் செல்வாய் 
கேழென்றே உன்னுள்ளே புதைந்தே விட்ட 
கெடுமதியாம் தாழ்வுணர்ச்சி மறப்பாய் கண்ணே.
★★★

No comments: