பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

3 Jan 2017

#சிற்றிலக்கிய_விளக்கம் :3


சிற்றிலக்கிய_விளக்கம் :3

           "பல்சந்த மாலை "
           *******************

சிற்றிலக்கிய வகைகளில் மிகவும் இனிமை தரக்கூடியது. காரணம் பல சந்தங்களில் கவிஞனின் எழுத்தாற்றலை வெளிக்காட்டும் வகையாகும்.  இவ்வகைக்கும் பாடுபொருளில்
ஏதும் வரையறையில்லை. எப்பொருளைப் பற்றியேனும் பாடலாம்.

இதன் இலக்கணம்...

   *  விருத்தம்,  அகவல்,  வண்ணம் ஆகிய மூன்றனுள் ஏதேனும் ஒன்றில் பத்துப் பாடல்கள் முதல் நூறு பாடல்கள் வரை பாடுவது "பல்சந்தமாலை "ஆகும்.
   * அனைத்துப் பாடல்களும் ஈறுமுதலித் தொடையான் அமைதல் வேண்டும். (ஈறுமுதலி - அந்தாதி) 
* எந்தப் பாவைத் தேர்ந்தெடுக்கிறோமோ அந்தப் பாவின் இலக்கணங்கள் பொருந்தியிருக்க வேண்டும். 
* பத்துப் பாடல்களானால்,  சந்தம் ஒன்றிற்கு ஒரு பாடலும்,  இருபதானால் சந்தம் ஒன்றுக்கு இரு பாடலும்,  (இப்படியே பத்து வரை கொள்க) அமையும்.
* கடவுள் வாழ்த்து ஒரு பாடலும், இலக்கியம் பத்து பாடல்களும்(அல்லது நூறு வரை) எனப் பதினொரு பாடல்கள் இருக்கும். 
* கடவுள் வாழ்த்து கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படாது. அந்தாதியும் அமைய வேண்டியதில்லை. 
* ஈற்றுப் பாடலின் ஈற்றுச்சீர் முதற்பாடலின் முதலாகி நிற்பது (மண்டலித்தல்) "மண்டல வந்தாதியாகும் "
(ஆனால் கட்டாயமில்லை. என் இலக்கியத்தில் வந்துள்ளதைக் காண்க)

இதன் இலக்கணத்தைக் கூறும் சில பாட்டியல் நூற்பாக்கள். . .

. . . பத்துமுதல் நூறு அளவா
. . . பல்சந்த மாலை
(பன்னிரு.பாட்டியல்.149)

அகவல் விருத்தம் வகுப்பாதல் பத்தாதி
யந்தம்நூ றாகும்பல் சந்தமாலை 
(சிதம்பரப் பாட்டியல் -  34)

பத்துக்கொரு சந்தம் பாடிப்பா நூறாக
வைத்தறான்  பல்சந்த மாலையாம்
(பிரபந்த திரட்டு)

பல்சந்த மாலை பப்பத் தொருசந்தம்
சிலவந் தாதியாய்ச் செப்புமன விருத்தமே
(தொன்னூல் விளக்கம் 275)
*****     *****     *****     *****     *****
       இதோ என்படையல். . .
படித்துக் களித்துக் கருத்துரையுங்கள்.!

பைந்தமிழ்   - பல்சந்த மாலை ************     ******************

கடவுள் வாழ்த்து (நேரிசை வெண்பா)

எந்தைக்கு முன்றோன்றி எந்தாய் எனவாகுஞ்
சிந்தை நிறைமொழியே செந்தமிழே - சந்தமுறப்
பல்யாப்பி லுன்பெருமை பாரோர்க் குணர்த்திடச்
சொல்லூக்கிக் காப்பாய் சுவை!

நூல்...

(அறுசீர் விருத்தம்) : 1
நன்றென நாப்பி  றந்து
    நனிமொழித் தோற்றத் திற்குத்
நின்றநற் றமிழத் தாயே
    நிறைவுறும் உணர்வு நீயே
இன்றிதை மறந்தோ ருள்ளில்
    ஏற்றிட வேண்டி யிந்த
இன்சுவைச் சந்தப் பாக்கள்
     எழிலுறச் செய்வா யம்மா!


(அறுசீர் விருத்தம் ) : 2

மானத்தைக் காவாக்கால் மாண்பிழந்து வாழ்விழந்து
   மருண்டு போவோம்
ஊனத்தால் உண்மைதனை உளம்நீக்கி வாழ்கின்றோம்
   உணர்வும் கெட்டோம்
தானொப்பே யில்லாத தாய்மொழியைத் தள்ளிவைத்துத்
   தரமி ழந்தோம்
மீனொத்துத் துடிக்கின்றோம் மேனாட்டார் தூண்டிலிலே
   விழுந்துற் றோமே!

(அறுசீர் விருத்தம்) : 3

மேன்மை இழந்தும் விளங்காத
    வீண ராகக் கிடக்கின்றோம்
ஊன்தான் பெரிதாய்க் கொள்கின்றோம்
    உடலை வீணே வளர்க்கின்றோம்
ஏனிந் நிலையே  எனவோரா
    இழிவில் வாழ்ந்து களிக்கின்றோம்
வானி னுயர்ந்த புகழ்கொண்ட
    வண்ட மிழையே மறந்தோமே!


(எழுசீர்விருத்தம்) : 4

மறதியே எம்மை வாட்டிடு நோயாம்
    மானமும் சுரணையு மில்லை
பிறப்பினில் தமிழர் எனும்பெயர் கொண்டோர்
    பெற்றியை உணர்ந்திடல் நன்றாம்.
இறப்பினும் வாழ்வோம் நந்தமிழ்த் தாயை
   ஏற்றிடு செயல்புரிந் தோமேல்
சிறப்புகள் சேரும் செம்மொழித் தமிழைச்
    சீருறச் செய்திடல் கடனே!

(எழுசீர்ச் சந்த விருத்தம்) : 5

ஏக்க முற்று வாட்ட முற்றி ளைத்து நிற்கு மன்பரே
போக்கி டந்தொ லைத்து நின்ற போக்கி லீயென் றாவமே
ஆக்கி னைக ளாயி ரஞ்செய் தன்னை யைமே லோங்கிட
நீக்க லாவி னைக ளாற்றி நீடு நாள்கள் வாழ்வமே!

(எழுசீர்ச் சந்த விருத்தம்) :6

வாழ்வி லேயினிமை காணு மோவருவர்
   மான மேயுறவு மியலுமோ?
தாழ்வி லேதிரிய ஏது வானவகை
   தானு மேபலவு மடைகிறோம்?
ஏழ்மை யானநிலை ஈன மேயிலையோர்
   ஈக மேயிலைநம் வாழ்விலே
ஊழ்வி னைகளல ஊறு செய்தவைக 
  ளாகு மேயெனவு ணர்கிலீர்!

(எண்சீர் விருத்தம்) : 7

உணர்வுக்குச் சூடேற்றி உரத்தை யிட்டே
    ஒண்டமிழைக் காக்கின்ற உரத்தைக் கொள்வோம்
நிணத்தோடும் அரத்தத்தில் வீரம் கொள்வோம்
    நெஞ்சுக்குள் இனமான நெருப்பைக் கொள்வோம்
தணலாகத் தகித்தால்தான் நம்மைச் சேர்ந்த
    சழக்குகளும் சருகாக எரிதல் கூடும்
கணப்போதும் நந்தமிழின் உயர்வை மட்டும்
    கனவாகக் கொண்டால்தான் உயர்வோம் தம்பீ!

( எண்சீர் விருத்தம்) : 8,

தம்பியுனை யழைக்கின்றேன்  தண்டமிழின் சீரைத்
    'தரணிக்குக் காட்டுகின்ற தருணமிது வாராய்
நம்பியுனை இருக்குதடா நந்தமிழ நாடும்
    நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்திடலாம் நீயும்
வெம்பியழச் செய்திடுவோம் வீணர்தம் நிலையை
    மேனிலையை மீட்டெடுப்போம் மேதினியும் போற்றும்.
தம்பெருமை உணர்ந்தால்தான் தமிழர்க ளாவோம்
    தடம்மாறிப் போனாலோ தறிதலைக ளன்றோ?

(வெண்டளையான் இயன்ற எண்சீர் விருத்தம்) : 9

அன்றோ அரும்பெற லாற்றலுடைச் சீரை
     அழகுதமிழ் பெண்ணாள் அணியாகக் கொண்டாள்
இன்றோ அவட்பெருமை இத்தரையில் தாழ
   இருந்தநிலைக் கேங்கி இழிந்தநிலை கண்டோம்
நன்னிலை மீண்டும் நடைபயில வேண்டின்
    நனிசெய லாற்றிடுவோம் நற்றமிழைப் பாரில்
முன்னிற்க வைப்போம் முயன்றாலே யாவும்
   முடியுமென நன்கறிக மூண்டெழுவோ மின்றே!

(பதின்சீர் விருத்தம் ) :10

எழுகின்ற தோர்சட்ட மெந்தமிழைக் கற்ப தற்கே    
   இளையோர்க்கு வேணாவல்  ஊட்டுவிதம் அமைதல் வேண்டும்.
பழுதில்லா அச்சட்டம் பல்கலையின் படிப்பீ றாகப்
   படித்தாக வேண்டுமெனக் கட்டாயம் செய்தல் வேண்டும்.
விழைகின்ற அரசுபணி தமிழ்படித்தால் கிடைக்கு மென்ற
   விரைவாக ஒருசட்டம் கொண்டுவரல் முதன்மை யாகும்.
தழைக்காதோ நம்வாழ்வும் உயராதோ தமிழ்ச்சி றப்பும்?
   தயங்காமல் இதைச்செய்தால் வருங்காலை விடியும் நன்றே!
                              ★

"பாவலர் மா.வரதராசன்."

                          ★★★

  

No comments: