பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Oct 2016

கவி,கவிதை ,கவிஞர் - வடமொழியா ,தமிழா ?




"கவி, கவிதை. கவிஞர் " இவை தமிழா? வடமொழியா?


சோலைவாழ் கவிஞர்கட்கு வணக்கம்.
"கவி " வடமொழி என்று அண்மையில் திரு. குறளோவியன் கல்லார் சாத்தப்பன் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டார். அதற்கு அருளியாரின் கூற்றையும், பாவாணரின் ஆய்வையும் காட்டினார்

.
மேலும், சங்க இலக்கியங்களில் இச்சொல் இல்லை என்பதே வலிமையான சான்று எனக்குறிப்பிட்டார். இந்தச் சொல்லாய்வு தொடர்பான சில கருத்துகளை என் முடிபாகக் கூற முயல்கிறேன்.
( பிறமொழிக் கலப்பில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனித்தமிழ் வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமும் ஆம்.)
இக்கட்டுரை மேற்குறித்த தலைப்பை ஒட்டியே அமைகிறது.
இலக்கியங்கள் மாந்த வாழ்வின் காலக் கண்ணாடியாகும். நம் முன்னோர் விட்டுச் சென்ற எச்சங்களையே நாம் இன்று புதிய புதிய வடிவங்களில் ஆண்டு வருகிறோம். எவையும் நாமாகக் கண்டுபிடித்த சொற்கள் அல்ல. அனைத்திற்கும் வேர்ச்சொல் நம் தாய்மொழியில் இருக்கின்றன. அவ்வாறிருக்கும் சொல்லே "தமிழ்ச்சொல் " எனக் கூறாது விளங்கும். வேர்ச்சொல் என்பது பலவற்றிற்கு அடிப்படையாக அமைவதாகும். ஒரு வேர்ச்சொல் ஒரு சொல்லுக்கு மட்டுமே வேராக நிற்காது. அதனடியாகப் பல சொற்கள் கிளைத்து வருவதற்குத் துணை நிற்பதே "வேர்ச்சொல் "எனப்படும்.
கவி என்னுஞ்சொல் வடமொழி என்னும் கூற்றார் குரங்கு என்பதைக் கவி என்று வடமொழியில் வழங்குவதாகக் கூறுகின்றனர். அச்சொல் கவியன்று. "கபி "என்பதே குரங்கைக் குறிக்கும். பகரம் வகரமாக வழங்கும் வழக்கம் பல மொழிகளில் உண்டு. தமிழின் கிளைமொழியான தெலுங்கில் வண்டியைப் பண்டி என வழங்குவர். மருவுதலும் ஒரு காரணமாக அமைந்துள மொழிகளுமுண்டு.
தமிழ்ச் சொற்கள் பல பிறமொழிக்குச் சென்று சிறப்பான ஆளுமையைப் பெற்றுப் பிறகு மீண்டும் தமிழுக்கே வந்து விடும் நிலை காலங்காலமாக நிகழ்ந்து கொண்டு வருகிறது.
குரு என்னுஞ் சொல் தொடக்கம், வேர், சிறுசெடி என்னும் பொருளைத்தரும் குருத்து என்னும் தூய தமிழ்ச்சொல்லிருந்தே வந்ததாகும். அறிவைப் பெறத் தொடக்கமாக அமைபவர் குரு. அது வடமொழியாளர்களால் குரு என்றே ஆளப்பட்டு வழங்கியதால் நம் தமிழ் ஆர்வலர் (மொழியியலார் உட்பட) அச்சொல்லை வடமொழி என நினைத்து ஒதுக்கலாயினர்.
அதே போல் தான் கவி என்னும் சொல் தமிழிலிருந்தே வடமொழிக்குச் சென்றிருக்கும் என்பதற்கு நம்முடைய சங்க இலக்கியத்திலிருந்தே சான்றுடன் விளக்குகிறேன்.
சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் முதன் முதலாக நல்லந்துவனார் என்னும் புலவர்,
""மாசில் பனுவல் புலவர் புகழ்புல
நாவிற் புனைந்த நன்கவிதை'' (பரிபாடல்-6:7,8)
என்று "கவிதை' என்னும் சொல்லை ஆண்டிருக்கக் காண்கிறோம். இதற்கு உரையெழுதப் போந்த பரிமேலழகர் "கவிதை - கவியது தன்மை. அதாவது, "ஈண்டுச் செய்யுள் மேல் நின்றது' என்று இதற்கு உரை விளக்கம் தந்துள்ளார். கவியது எனில் கவிந்து நிற்பதாம்.
நான் முன்பே குறித்தாற்போல், கவி எனில் கவிதல், கவிழ்தல், அடைத்தல், நிறைத்தல் எனப் பொருடரும். ஒரு வேர்ச்சொல் ஒரு சொல்லுக்கு மட்டுமே வேராய் நில்லாமல் பல சொற்கள் கிளைத்தற்கும் ஏதுவாகுந் தன்மையான் கவி என்னும் சொல் (கருத்தை) நிறை என்னும் வினையாகவும் நின்றது.
சங்க இலக்கியச் சான்றும் கொடுக்கப்பட்டுள்ளது. பரிபாடலின் காலம் ஆய்வுக்குரிய தொன்மைத்தாயினும் சற்றேறத்தாழ ஈராயிரம் ஆண்டுகட்கு மேற்பட்டது என்பது மொழியியலார்தம் முடிபு. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே பயன்படுத்திய ஒரு தமிழ்ச்சொல்லைப் பிறமொழியார் அவர்களுக்கு வேறு சொல் கிடைக்காததால் கவியென்று பயன்படுத்தினர் என்ற காரணத்தால் அச்சொல் தமிழில்லை என்பது ஏற்புடைத்தன்று.
இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதையில் "தலைக்கோல்' சிறப்பைக் கூறுமிடத்தில், ""தேர்வலஞ் செய்து கவி கை கொடுப்ப'' என்றார். இங்கு "கவி' என்றது புலவரை எனச் சொல்லவும் வேண்டுமோ?
கம்பர், தமிழ்ப் புலவர்களைக் குறிப்பிடும்போது, ""சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்'' (பாலகாண்டம்-நகர்ப்படலம்:1) என்கிறார்.
இவ்வாறு நம் முன்னோர் விட்டுச் சென்ற எச்சத்தைக் கைக்கொள்ளாது விடுத்தல் பிழையாகும்.
பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் கூறியதை மட்டும் எடுத்துக் கொண்டு,
பரிபாடலும், சிலம்பும், கம்பரும் கூறியதை தள்ளிவிட முடியாது.
" சங்க இலக்கியங்களில் இல்லை" என்பதால் ஒரு சொல் தமிழில்லை என்பது அறியாமை என்பதற்கு இன்னொரு காட்டு...
தமிழின் தொடக்கமான அகரம் மழலை வாயால் அங்காத்துத் தொடக்கம் பெறும் அருமையான சொல் "அம்மா " . அம்மா எனக் குழந்தை கூறும் வேர்ச்சொல்லால் அம், அம்ம, அம்மா, அம்மம், அமுதம், அமை...எனப் பல சொற்கள் பிறக்க ஏதுவாகிறது.
ஆனால்,
★இத்துனைச் சிறப்பு பெற்ற அம்மா என்னுஞ் சொல் எந்தச் சங்க இலக்கியங்களிலும் இல்லை.★
அதற்காக அம்மா என்னும் சொல் தமிழ்ச்சொல் இல்லை எனச் சொல்லிவிட முடியுமா?
காலப் பயன்பாட்டில் வழக்கிலிருக்கும் சொல் வேறு காலத்தில் அதே பொருளுடன் வேறு சொல்லால் வழக்கு பெறும் என்பதே மொழியின் பரப்பாகும். அதன் வளர்ச்சி நிலையும் அதுவேயாம்.
எனவே, கவி, கவிதை, கவிஞர் என்பவை நல்ல தமிழ்ச் சொற்களே என்பது என் முடிபாகும். அதனால் நம் பைந்தமிழ்ச் சோலையில் கவிஞர், கவிதை, கவியரங்கம் என்பன பாவலர், பா, பாவரங்கம் என மாற்ற வேண்டியிராது. அனைத்தும் தமிழாகவே கொண்டு பயன்படுத்தப்படும் எனப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்றபடி அயற்சொல் என நன்கு தெரியவரும்போது கண்டிப்பாக அச்சொல்லை விடுத்து அதற்கு நேரான தமிழ்ச்சொல்லை நம் அன்பர்கள் பயன்படுத்தப் பழக வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்


No comments: