பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Feb 2016

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 8




#‎சோலைக்கவியரங்கம்‬
கவிஞரை அழைத்தல் : 8
(நேரிசை வெண்பா)
செந்தமிழ்த் தேனீ செழும்பா வலரிவரே
முந்தித் தனிச்சுவையிற் முத்தாக - நந்தம்
வியாபித் தொளிர்கின்ற மென்றமிழின் சீர்பாடும்
சியாமளா வந்தார் சிறந்து!
‪#‎சியாமளா‬ அவர்களே வருக!
செந்தேன் கவிமழை பொழிக!!


போற்றப்பட வேண்டியது...
இ. தாய்மை
"""""""""""
கவிஞர் ‪#‎சியாமளாராஜசேகர்‬
சென்னை
புதுமையில் பூத்த மரபு கவிஞர்,
பைந்தமிழ்ச் சோலையில் பாடல்களை அதிகம் பாடியவர். பாட்டியற்றுக பயிற்சியில் அனைத்திலும் பங்கேற்றவர்.
********** ********** ********
தமிழ் வாழ்த்து
(நேரிசை வெண்பாக்கள்)
உணர்வில் நிறைந்தே உயிரில் கலந்து 
மணக்கும் தமிழேநீ வாழி !- வணங்கித் 
தொழுவே னுனையே துணையாய் நினைப்பேன் 
குழுமம் குளிர்ந்திட வா .

அவையடக்கம்
மரபின் மலர்கள் மணந்திடும் சோலை 
தரத்தில் சிறந்துத் தழைக்கும் - வரமெனப் 
பாவலர் சேவையில் பைந்தமிழ் ஓங்கிட 
ஆவலாய்ச் சொல்லுவேன் வாழ்த்து 

போற்றப்பட வேண்டியது ......தாய்மை

கருவில் உருவான காலம் முதலே 
விருப்பு வெறுப்புகள் வெல்வாள் ! - மருந்தைத் 
தவறாம லுண்டுச் சலித்துக்கொள் ளாமல் 
தவமாய் நினைப்பவள் தாய் .

உதிரத்தைப் பாலாக்கி யூட்டுவாள், நெஞ்சில் 
மிதித்தாலும் புன்னகையால் வெல்லும் - புதிரவள்! 
கண்ணெனக் காக்கும் கருணாகரி! ஓங்கிடுமே 
மண்ணுலகில் மாதாவின் மாண்பு .

தாலாட்டுப் பாடிடும் தாய்மையின் பூரிப்போ
வாலாட்டும் பட்டமாய் வான்பறக்கும் !- காலாட்டித் 
தூங்கவைக்கும் அன்பினில் தோற்றோடும் தாயுறக்கம் 
நீங்காத யின்பம் நிறைத்து .

அன்பும் கருணையும் ஆறாய்ப் பெருகிடத்
தன்னல மில்லாத் தகைமையால் -வென்றிடுவாள் 
நெஞ்சம், பலனை நினையாமல் சேவைகளால் 
தஞ்ச மளிப்பவள் தாய் .

தனக்கென ஆசையின்றித் தன்மக்கட் காக 
மனத்தி லிடம்கொடுத்து வாழ்வாள் !- கனவிலும் 
தன்கன்றின் துன்பத்தைத் தாங்காமல் வாடிடும்
தன்னிக ரற்றவள் தாய் .

தியாகச் சுடராய்த் திகழ்ந்தே ஒளிரும் 
தயாள குணத்தினள் தாயே !-தியானமுடன் 
பக்தியுஞ் செய்துநல் பத்தியமும் காத்திடும் 
சக்தியாய் நிற்பவள் தாய் .

தாயின் மடியில் தலைதனைச் சாய்த்திட 
நோயின் கடுமை நுடங்குமே !- வாயிலும்
ஊட்டுவாள் வார்த்தைகளால் ஒற்றடம் தந்திடுவாள் 
காட்டுவா ளென்றுங் கனிவு .

மனமே!நீ தாயை மதித்திடல் வேண்டும் 
கனவிலும் தீங்கிழைக் காதே !- தினமும் 
தொழுவாய் துயரைத் தொலைப்பாய் இனியும் 
பழுதறப் போற்றப் பழகு .

கண்கண்ட தெய்வம் கலியுகத்தில் யாரெனில் 
கண்மூடி யன்னையைக் காட்டுவீர்! - பெண்மையின் 
பேற்றினில் தாய்மையே பேரின்பம், பாரினில் 
போற்றப் படவேண்டும் பூத்து .

மாதவங் கொண்ட மகத்தான சக்தி,நால்
வேதமும் கொண்டாடும் மேன்மையாள் !- பேதமின்றிப் 
போற்றிட வேண்டியது பூவுலகில் தாய்மையே 
நூற்றுக்கு நூறு நிசம் .

சியாமளா ராஜசேகர் 
ராயபுரம் 
சென்னை - 600013 
நாள் : 19/01/2016
★★★★★

No comments: