பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

8 Jan 2016

13) அறியார் பிழை !


வணக்கம் அன்புடையவர்களே !
தங்கள் அனைவரையும் ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் சந்திப்பதில் ஆனந்தம் கொள்கின்றேன். இதோ இவ்வாரத்துத் தேன்துளி.
14) அறியார் பிழை !
அர்ப்பமான காசுக்காக ஒரு பச்சைத் துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்ட அவர், இங்கே சிலுவையில் அறையப்பட்டு முள் கிரிடம் அணிந்து கிடக்கின்றார். கயவர் பலரால் சாட்டையால் அடிக்கப் பற்ற இரத்த காயங்கள் மேனியைப் புண்படுத்த, அவர் சிலுவையில் கிடக்கின்றார். ஆணிகளால் அறையப்பட்டு கைகளிலும் கால்களிலும் ரத்தம் வடிய வடியச் சோர்ந்து கிடக்கின்றார்.

மண்ணில் பரவி இருந்த அறியாமை இருள் நீக்கக் குன்றத்து ஒளியாய் மனிதரின் உருவிலேயே உதித்த அந்த இறைமகனின் சிலுவை மலையின் உச்சியில் நின்றுகொண்டிருக்க அவரது சிலுவைக்குக் கீழே ஒன்றும் செய்ய இயலாத வாறு கண்களில் நீர் கசிந்திட அவரது அன்பர் கூட்டம் நின்றுகொண்டிருக்கிறது.
மற்றொரு பக்கம் அந்த வள்ளலின் தேகத்தில் காயங்களை ஏற்படுத்திய கயவர்களான மன்னனின் வீரர்கள் இருக்கின்றார்கள். மற்றொரு பக்கம் கடவுளின் மகனான அவருக்கு அருகினில் கள்வர்கள் இருவர் அவரைப் போலவே சிலுவையில் அறையப்பட்டு வருந்திக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அனைவரும் ஆழ்ந்ததொரு அமைதியில் துக்கத்தில் நின்று திளைக்கத், தனது திருவுடலில் ஆணிகளை ஏந்திய அண்ணல் தனது கனியினை ஒத்த எழில் வாய் மலர்ந்து சில வாசகங்கள் மொழிகின்றார். மேனி கொண்ட வலியோடு மனதில் ஏற்பட்ட ரணங்களும் சேர்ந்து அவரைப் பேச விடாதவாறு நாவினை உழற்ற அவர் இந்த வாசகங்களை பேச முன்வருகின்றார். "எனது ஆருயிர் தந்தையே இங்கு இருப்பவர்கள் யாவரும் நல்லார். தான் என்ன செய்கின்றோம் என்பதை அறியாது இவர்கள் பெரும் பாவத்தை இழைக்கின்றார்கள். இவர்களை நீங்களே தங்களது அருள் இதயம் கொண்டு மன்னித்து அருளுங்கள் ஆண்டவரே !" என்று அந்த ஏசுபிரான் உரைக்கின்றார்.
தான் அல்லலுற்று வாடி வதங்கிய பொழுதும் தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை மன்னிக்க ஆண்டவரைப் பிரார்த்திக்கும் ஏசுபிரானை நமது கிறித்துவக் கம்பர் என அழைக்கப்படும் எச்.எ.கிருட்டினபிள்ளை, தனது இரட்சணிய யாத்திரிகத்தில் மிகவும் அருமையாக சித்தரித்து விளக்கியமையே இவ்வாரதுத் தேன்துளி....
இதோ பாடல்
தன்னரிய திருமேனி சிதைப்புண்டு தவிப்பெய்திப்
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்
இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை 
மன்னியுமென் றெழில்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல் !
-எச்.எ.கிருட்டிணப்பிள்ளை

No comments: