பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

5 Jan 2016

12) காக்கைக்கு லஞ்சம்


வணக்கம் அன்புப் பாவலர்களே
அனைவரையும் ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். இதோ இவ்வாரத் தேன் துளி
13) காக்கைக்கு லஞ்சம்
காலையில் எழுந்து தன் வீட்டின் வாசலில் வந்து குழுமியிருந்த காக்கைக் கூட்டத்தை அவள் நோக்குகின்றாள். அவைகளிடம் ஏதோ பேச முனைகின்றாள். கண்களில் ஒரு வித ஏக்கம் தழுவ அவள் காக்கைகளைப் பார்கின்றாள். அந்தக் காக்கைக் கூட்டத்தில் ஒற்றைக் காக்கையை மட்டும் அவள் நோக்கி பேசத் துவங்குகின்றாள்.

"எவ்விதக் குற்றமும் செய்யாத சிறிய மென்மையான இறகுகளைக் கொண்டு மனிதரைப் போலவே சுற்றத்தாரோடு பகிர்ந்து கரைந்து உண்ணுதலை வழக்கமாகக் கொண்ட காக்கையே ! நீ உனது சுற்றத்தார் புடை சூழ இங்கே வந்து அமைதியுடன் உண்ணுதற்கு உனக்கு நான் தங்கத்தால் ஆன சிறிய பாத்திரத்தில் உனக்கு உணவு தருகின்றேன்"
"நன்கு பதப்படுத்தப்பட்ட அந்த உணவானது உனக்கு மிகவும் பிடித்தமான மாட்டின் இறைச்சியாக இருக்கும். குற்றமற்ற வகையில் நல்ல சுவை நல்குவதாய் இருக்கும் அந்த இறைச்சியினை நான் உனக்குத் தருகின்றேன்."
"இதனை நீ நான் உனக்குத் தரும் லஞ்சம் என்று நினைத்தாலும் சரி அல்லது உன்னை இப்பொழுது என் இறைவனாக நான் ஏற்று உனக்குப் படைக்கின்ற படையலாக நினைத்தாலும் சரி நான் உனக்குத் தரும் இந்த அன்பளிப்பை ஏற்றுக் கொள்"
"ஆனால் இதற்கு கைம்மாறாக நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். அழகிய ஆற்றங் கரையில் பாய்ந்தோடும் நீர்ப் புனலினைப் போன்ற கூந்தலை உடைய என்னருமை மகள் அவளாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொண்ட கணவனோடு இங்கே மறுவீடு வருவாள் என்ற நல்ல எண்ணம் மேலோங்க நின்று கரையுவாயாக ! "
இவ்வாறு அந்த நல்ல தாய் பேசத் துவங்கி முடிக்கின்றாள். அந்த நாட்களில் காக்கைகள் கரைந்தால் விருந்தினர் வருவார் என்ற எண்ணம் மேலோங்கி யிருந்தது என்பதனை நமக்குணர்த்தும் வண்ணம் அமைந்த இதே தேன் துளி அக்காலத்தே லஞ்சம் என்பதும் இருந்தது என்பதனையும் கூறுகின்றது. இதுவே இவ்வாரத்தில் ஐங்குறுநூறு தந்த தேன் துளி !
இதோ பாடல் :
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை 
அன்புடை மரபினின் கிளையோ டாரப் 
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ
வெஞ்சின விரல்வேற் காளையோ
டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே !
-ஓதலாந்தை

No comments: