பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

30 Jan 2016

பாட்டியற்றுக : 19 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 19 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது.
பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது.மகிழ்ச்சி.
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 19

வெண்கலிப்பா
******************
1. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
அழுக்காறு தனையுடையார்  அனைவருமே ஒருநாளில்
இழுக்குற்று மேதினியி லெல்லாரும் பழித்திடுமோர்
நிலைகாண்பர் எனவேதான் நிலவுலகில் அழுக்காறு
குலத்தினைக் கெடுக்குமெனக் கூறு!

2. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
மாசுகள் கலைந்திடுவாள் மகத்துவமாய் நிறைந்திருப்பாள் 
தூசுகள் துயரங்கள் துடைத்திடுவாள் புவிதனிலும் 
தாய்க்குமே நிகராக தரமான இறையருளை 
வாய்க்கவும் அருளுவரோ வாய்ப்பு!

3. கவிஞர் அர.விவேகானந்தன்
பாருக்குள் நலமெனவே பகைகாட்ட. பலருண்டு
சேருமுன்னே தெளிந்திட்டால் சிறப்புவரும் எவர்க்குமே
சூழ்ந்திடும் துயர்தனையே சுணக்கமின்றி மகிழ்வாக்க 
ஆழ்ந்திடு முறவதனைத் தேடு!

4. கவிஞர் இரா.கி. இராஜேந்திரன்
ஆடிய அழகியவள் அழகினிலே சிறுயிடையால்
ஆடல ழகிநடனம் அறிவினதில் புகுந்ததங்கே
ஆடவன் அவளழகில் மயங்கியதால் கவியெழுதி
ஆடினான் அவளுடனே அசைந்து!

5. கவிஞர் சுந்தரராசன்
பயிற்சியினாற் பழகுதற்குப் படைக்கும்பாட் டியற்றுகவும்
முயற்சியினா லறிதற்கு முயன்றுபார்க்க வழைப்பதுவும்
மலர்சோலைக் கவியரங்க மணமும்கண் டுருகியதால்
அலர்ந்திடுதே தமிழ்த்தாயி னகம்!

6. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
காசோடு வருபவர்க்கே கடவுளிடம் சிறப்புவழி 
தூசாக மதித்திடுவார் தொகையில்லா எளியோரை 
எல்லோரும் குணமொன்றே இயல்பெனவே இருந்துவிடின் 
நல்வாழ்வில் நலம்பெறுமே நிலம்!

7. கவிஞர் நாகினி கருப்பசாமி
கனவெனில் மறந்திடும் கவலைகளும் நிதமிங்கு 
நனவென நடந்தேறி நாக்குதிர்ந்து வருகின்ற
மனவலி மொழிகளுமே மாசுடைய பகுத்தறிவு
வனப்பென வருத்திடும் வம்பு!

8. கவிஞர் அழகர் சண்முகம்
முளைத்துவரும் விதையுமிள முனையாலே நிலமென்ற
தளையுடைத்துத் தலைநிமிர்ந்து தழைப்பதுபோல் அயராமல்
களைப்பைவிட்டுக் கவனமுடன் கடுமுழைப்பால் முயல்வாழ்வில்
வளையாமல் செழித்தோங்கும்  வளம்!

9. கவிஞர் பொன்.பசுபதி
இனித்திடும் தமிழ்மொழியி(ன்) இலக்கணங்கள் துலங்கிடநாம்
தனித்தமி(ழ்) எழுதுதலே தலையாய கடமையென
ஆக்கிடும் படைப்பையெலாம் அருந்தமிழி(ல்) அமைத்திடுவோம்
போக்குவோம் அயல்மொழியின் சேர்ப்பு!

10. கவிஞர் கணேசன் ராமசாமி
காரிருள் விலகிடுதே கதிரொளிதான் பரவிடவே
காரிகை பலர்தலையில்  கலயங்கள் சுமந்துசெல்ல
ஏரினை தடந்தோளர் எடுத்தேநற் பணியாற்ற
ஊரினில் செழித்திடுதே உழவு!

11. கவிஞர் பரமநாதன் கணேசு
துக்கத்தி லிருப்போர்கள் துடித்திடுவார் துவண்டிடுவார்
பக்கத்தி லிருப்போரைப்  பணியாளை மனையாளை
அக்கக்காய் கிழித்திடுவார் அனைத்திற்கும் அவர்களையே
தக்கசான் றெனவெண்ணிச் சலித்து.!

12. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
பாவினால் புகழ்ந்திடலாம் பரமனுமே மகிழ்ந்திடுவான்
ஆவியும் செலவழியா அதிகமாக இதனாலே
சித்தமும் சிவனருளால் தெளிவாகும் வழியிதனை
நித்தமும் நவிலுகவே நினைந்து!

13. கவிஞர் தாமோதரன் கபாலி
கூவிடு பரவசமாய்ப் புகழ்பாடிப் பரமனையே 
தூவிடு மணங்கமழும் சுகமலரைத் திருவடிக்கே 
கற்றவர் கவிபாடும் கற்பகமே தேனமுதே 
நற்றவர் நாடிடும் சுகம்.!

14. கவிஞர் நடராசன் சீனிவாசன்
செந்தமிழில் கவியெழுதச் செலவிட்டேன் பொழுதினையே;
வந்ததம்மா மனத்திலொரு வசந்தத்தின் குதூகலமே!
அந்தநொடிச் சுகத்திற்கே அகிலத்தில் இணையில்லை!
அந்தமிகு தமிழ்தானென் அனை!

15. கவிஞர் கேகிரவா
வேகமா யுருண்டதனால் விதிப்படியும் நெருங்கியதே 
சாகவோ விரைந்ததந்தச் சவங்களெலா மெழுந்திடுமோ
சோகமுற விழுந்ததனால் சிதைந்திட்டார் சாலைதனில்
நோகவே அழுகின்றார் நொந்து.!

16. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
மாமலைகள் தருவித்த மணமகளும் இவளென்று
பூமழையைச் சிதறித்தான் புதுமையாய்க் குதிக்கின்றாள்
சீரியநல் அருவிமகள் சினங்கொண்டால் இப்பாரோ
வேரிற்று விழுமரம்போல் வீண்.!

17. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
மகிழ்ச்சியினை யளித்திட்ட. மலர்வான தொருநாளாம்
இகழ்ந்தோரும் புரிந்துகொள்ள எனக்கமைந்த தொருவாய்ப்பாம்
கவியழகு தனையளிக்கும் கவிஞனென நிலைப்பேனோ
புவியினிலே, தமிழன்னாய் புகல்!

18. கவிஞர் வீ.சீராளன்
காதலின் இனிமைதனைக் கயல்விழியால் பரிமாறிச் 
சாதலின் நினைவுகளைச் சரித்துவிட்டு ! இதழ்மூச்சால் 
நோதலின் வழியெல்லாம் நுடங்கிவிட வகைசெய்தாள் 
ஆதலின் அவளெனக்கோர் அணங்கு !

19. கவிஞர் ஐயப்பன்
மலைவில்லைப் பிடித்தவன் மலைமகளை மணந்தவன்
மலைக்குடையைப் பிடித்தவன் மகிழவிடங் கொடுத்தவன்
மலைஅண்ணா மலையாக மதியணிந்து தெரிபவன்
சிலைவடி வமர்ந்தவன் சிவன்!

20. கவிஞர் காவியக்கவி இனியா
கண்ணாவுன் அருகிருக்கக் கரைகிறது மனமிங்கு
மண்ணையே விழுங்கியவா மகத்தான பிறப்பெடுத்து 
விண்ணைவிட்டுக் களைநீக்க விரும்பிவந்தாய் ! புவனத்தின்
எண்ணற்ற துயர்போக்க இசைத்து!

21. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
நதிக்கரையில் மனையமைத்து நலத்துடன் இருந்திடவே
விதிமுறைகள் கடைபிடிக்கா வீடதனுள் நதிநீரால்
கதியிழந்த மக்களையும் கரையிலேற்ற உதவியதை
மதித்துணர்ந்து போற்றிடலாம் நாம்.!

22. கவிஞர் குருநாதன் ரமணி
என்னையுமோர் பொருட்டாக இறைவாநீ நினைத்தேதான்
என்வாழ்வில் வளமெல்லாம் எடுத்தாள விளைத்தனையே!
நானுன்னை அதுபோல நலிவின்றி நினைத்தேனோ?
தானாள உழல்வதேயென் தரம்!

23. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
பெருநடையில் கவியெழுதிப் பெருங்குரலா லொலிக்காது
பொருள்செறிந்த கவிபாடப் பெருகுமே புகழுலகில்
கருகொண்டக் கவிதைகளாய்க் கமழவே நறுந்தமிழில்
தரும்பாடல் திகட்டாது தான் !

24. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
நானெனச் சிலிர்த்திருந்தால் நலமேதும் நிலைக்காது
வானென அகமிருந்தால் வளமேதுந் தழைக்காது
தாழ்ந்துநீ பணிந்திருந்தால் தலைக்கனமு மிழந்திருந்தால்
சூழ்ந்துனை வலம்வருமே சுகம்!

25. கவிஞர் சுதர்சனா
திருநந்த வனமெழுப்பி தினம்பூவால் தொழுதேத்தித்
திருமாலை எனும்பாவால் திருமாலைக் கவிபாடி
விடியலிலே அரங்கனாரை வடிவுதுயி லெழுப்பியசீர்
அடியாரின் அடிப்பொடியே அரண்.

26. கவிஞர் சியாமளா ராஜசேகர்
கூவிடுங் கருங்குயிலின் குரலினிமை மயக்கிடுமே 
தூவிடும் மலரிதழின் சுகந்தனிலே குளிர்ந்திடுமே 
ஊதிடும் குழலிசையும் உளத்தினையே வருடிடுமே 
காதினி லினித்திடும் கவி .

27. கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
அதிகாலை மலரெடுத்தே அடுக்கியதோர் சரம்போல
மதித்திடுமுன் உறவுகளால் மகிழ்ந்திடினும் பிறவியிலே
கதியடையும் வழியறியாய்.. கலக்கமிலா மடநெஞ்சே..
பொதியேனோ? இருவினையும் பொசுக்கு.! 

No comments: