பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

6 Dec 2015

முயன்று பார்க்கலாம் - 2






முன்முடுகு வெண்பா
***********************
வெற்றுப்ப யற்சொற்ற இற்றுச்சொ லுட்பட்டு
முற்றுப்பெ றற்கெற்று மொத்தத்தி - லிற்றைக்கு
நாட்டை இழந்து நலங்கெட்ட எந்தமிழர்
மீட்சி யடைவர் மிளிர்ந்து.
--பாவலர் மா.வரதராசன்--
கருத்தூன்றுக
***************
இஃது சற்றே கடினமான யாப்பு வகை. நேரிசை வெண்பா தான். ஆனால் முன்னிரண்டு அடிகள் ஒருவித விரைவு நடையுடன் இலங்குகின்றன. இந்த விரைவு நடைக்கு "முடுகு " எனப்பெயர். முடுகு என்றால் விரைவு எனப்பொருள். இப்பாடல் முன்னிரண்டு அடிகளில் "தத்தத்த" என்ற சந்தத்துடன் முடுகி நடப்பதால் இது "முன்முடுகு வெண்பா " ஆகும்.
இசைப்பாக்களான சிந்துப்பாடல்கள் பலவும் முடுகியலைக் கொண்டு திகழும்.
முடுகியல் சந்தங் கொண்டு நடப்பதால் அவற்றை நாம் தேமா, புளிமா போன்ற வாய்ப்பாடுகளால் அளவிட முடியாது. மாத்திரை வேறுபட்டுச் சந்தம் தப்பி ஒலிக்கும். எனவே, முடுகியலைச் சந்த இலக்கணப்படியே வரையறை செய்தல் வேண்டும்.

சந்த இலக்கணம்
★(இதைத் தனியாகக் குறித்து வைத்துக் கொள்ளவும்)
குறில், ஒற்று - 2 மாத்திரை
நெடில், ஒற்று - 2 மாத்திரை
நெடில் - 2 மாத்திரை
குறில் - 1 மாத்திரை
சுருங்கக் கூறின், குறிலுக்கு ஒரு மாத்திரை,
மற்றவற்றிற்கு இரண்டு மாத்திரை.
இருகுறில் இணைந்து வரும்போதும் அதைத் தனித்தனியாகவே குறிக்க வேண்டும். இருகுறில் அடுத்து ஒற்று வரின் முதல் குறிலைத் தனியாகவும், அடுத்த குறில் ஒற்றைத் தனியாகவும் அலகிட வேண்டும்.
அனைத்திற்கும் சான்றுகள்.
கண்
கால்
பா
இவை இரண்டு மாத்திரை.
ப - இது ஒருமாத்திரை.
இருகுறிலொற்றுக்குச் சான்று.
எமன். இதை எ /மன் எனப் பிரிக்க வேண்டும்.
சந்த வாய்ப்பாடு
******************
தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன, தய்ய 
இவை எட்டும் அடிப்படையானவை. 
இவற்றின் இறுதி நீட்டங்கள் சார்புச் சந்தங்கள் எனப்படும்.
தத்தா, தாத்தா என்பது போல்.
இவற்றுடன் இணையும் அரைச்சந்தங்கள்,
த்,ந்,,ன,த,னா,தா,னத்,தத்,னாத்,தாத்,னந்,தந்,னாந்,தாந், 
என்பனவாகும். இவை ஒன்றுடனோ, பலவற்றுடனோ கூடிச் சந்தம் இசைக்கும்.சான்றாக, மேற்கண்ட பாடலில்,

தத் என்ற அரைச்சந்தம், தத்த என்பதுடன் கூடித் "தத்தத்த " என்று இசைக்கிறது. 
இவ்வாறு கோடிக்கணக்கான சந்தங்களை உருவாக்கலாம்.

இவ்வாய்ப்பாட்டை இசையாசிரியர் "தத்தகாரம் " என்பர்.
வண்ணப் பாடல்களுக்கும், சந்தப் பாடல்களுக்கும் அடிப்படை இந்தச் சந்தங்களே என்பதால்,இந்த இலக்கணத்தைக் குறித்து வைத்துக் கொள்ளவும். இனிவரும் பயிற்சிகளுக்கு உதவும்.
★முக்கிய குறிப்பு★
முடுகு என்பது வண்ணப் பாடலைப் போல் மாறாச் சந்தத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதால் சந்த வாய்ப்பாட்டில் கொடுக்கப்படும் ஒற்று எந்த இனத்தைச் சார்ந்ததோ அதே இனவொற்றெழுத்தே தத்தகாரத்தில் பயின்றுவர வேண்டும்.தத்த என்பது வாய்ப்பாடு எனில் பாடலில், குறில்,வல்லொற்று, குறில் என்று வரவேண்டும்.
சான்று பாடலில்,
தத்தத்த என்பது வாய்ப்பாடு என்பதால், குறில்,வல்லொற்று,குறில்,வல்லொற்று.குறில் என்று அனைத்து ஒற்றுகளும் வல்லொற்றுகளே வந்துள்ளதைக் கவனிக்கவும்.
தந்தந்த என வாய்ப்பாட்டைக் கொண்டால், ஒற்றுகள் மெல்லொற்றுகளாக இருக்க வேண்டும்.
வல்லினம் மிகுமிடங்களால் மிகா இடங்களால் சந்தம் மாறாமல் வரும்படி எழுத வேண்டும்.
நெற்றிக்கு பொட்டிட்டு என எழுதினால், நெற்றிக்கு"ப்" என தத்தத்தத் சந்தமாகிவிடும்.
குற்றியலுகரப் புணர்ச்சியையும் பார்க்க வேண்டும்.
பாட்டுக்கு ஏட்டிக்கு என்றால், பாட்டுக் கேட்டிக்கு என்று சந்தம் மாறும்.

நண்பர்களே! புரிகிறதா? உங்கள் ஐயங்களை இப்பதிவின் கருத்துப் பகுதியிலேயே கேளுங்கள். பயிற்சிப் பாடலையும் அதிலேயே எழுதுங்கள்.
*பின்னிரண்டு அடிகளில் முடுகியல் வருவது "பின்முடுகு" என்றும், பா முழுதும் முடுகி வருவது "முற்று முடுகு " என்றும் அழைக்கப்பெறும். ஈற்றுச்சீரில் சிறு நுட்பம் மட்டும் உண்டு. இவற்றை அடுத்த பயிற்சிகளில் பார்க்கலாம். அனைத்தையும் முயன்றால் கருத்துரைக்க நேரமிருக்காது. முன்முடுகு வெண்பா மட்டும் முதலில் முயலவும்.
முயன்றால் முடியாதது ஏதுமில்லை. 
#முயன்றுபார்க்கலாம்

*பாவலர் மா.வரதராசன்*
★★★

No comments: