பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

23 Sept 2015

மரபைப் போற்று 2


தொடர்ச்சி...

நன்றாகச் சிந்தித்துப் பாரீர் இந்த
       ஞாலத்தில் முதன்மொழியாய்ச் சிறப்ப டைந்து
பன்னூறு பனுவல்கள் கொடுத்த தென்றால்
       பாரெங்கும் அம்மொழியே ஓங்க வேண்டும்.
பொன்றாத வழிபோற்றி வாழ்வோ மானால்
       புரையோடிப் போய்விட்ட புண்ணென் றாவோம்
இன்றிங்குப் புதுக்கவியைத் தம்ம னத்தில்
       ஏற்கின்ற நண்பர்கள் உணர்தல் வேண்டும்.!



தன்னாட்டுப் பண்பாட்டைக் காக்க. வேண்டித்
       தடையேது மில்லாத வகையில் எண்ணிப்
பொன்னான காலத்தை வீணாக் காமல்
      பொங்கிவரும் எண்ணத்தைத் "துளிப்பா." வாக
நன்முறையில் புத்தமதம் சப்பான் மண்ணில்
      நலத்தோடு வளர்த்திடவே எழுதி னார்கள்
தென்னாட்டில் கவிதைக்குக் குறைவா என்ன.?
     தெளிவான மரபில்நம் கவிதை நெய்வோம்.!


புதுமையெலாம் எங்கிருந்து வந்தா லென்ன...
       போற்றுவதே நம்கடமை என்னுந் தோழா,
புதுக்கவியும் துளிப்பாவும் உள்ள நாட்டில்
       பொற்றமிழின் பாவகைகள் ஏற்ற துண்டா.?
முதுமைகள் வீழ்கின்ற போது நல்ல
       முதிர்ந்திட்ட நல்வாழ்வை விதைத்துச் செல்லும்
பதுமையென மேனாட்டுப் புலம்பல் தன்னைப்
       பாரமெனச் சுமக்கின்ற தமிழா கேளாய்...,


(அடுத்த பதிவில் முடியும்.)

*பாவலர் மா.வரதராசன்*

No comments: