பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Sept 2015

அறிவினுக் கில்லை அகவை (நேரிசை வெண்பாக்கள்)




சிறியனென் றென்னைச் சிரித்திக ழாதீர்
அறிவினுக் கில்லை அகவை - உறைநோய்
நிறையழிக்கும் புல்லின் நிறையறிவீர் மண்ணில்
மறைந்துளதே வித்துள் மரம்.!

மேடேறிப் பார்க்குங்கால் மேதினியி லெல்லாமே
ஈடாகத் தோன்றும் எழிலார்ந்தே - தேடியுணர்
ஆன்ற அறிவில் அனைத்தும் இணையன்றோ
சான்றோரில் மூத்தோரென் றில்.!



அளக்கும் துலாக்கோல் அறிவொன்றே கண்டீர்
பிளக்கும் மலையை உளிதான் - வளைத்துப்
படர்ந்த கருவேலத் தாற்பயனு மில்லை
அடர்துளசி யேநல் மருந்து.!

வம்பாய்ப் படிப்பொன்றே வாய்த்த தகுதியென்பீர்
கம்பன் பயின்றதெக் கல்லூரி - அம்மே
கடுகு சிறுத்தாலும் காரம்போ காதே
விடுக இழிவெண்ணம் வீண்.!

முயன்று பலரும் முனைவராய் ஆனார்
இயன்றும் மரபறியார் யாப்பில் - வியர்க்காதே
குப்பைத் திருமேனி கூன்நிமிர்த்தி வாழ்வளிக்கும்
தப்பாமல் யாப்பைப் பயில்.!

*பாவலர் மா.வரதராசன்*

No comments: