பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Sept 2015

பாட்டியற்றுக 5




நண்பர்களே.! கவிஞர்களே.!
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 5" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!

***** ***** *****
பாட்டியற்றுக : 5

நேரிசை ஆசிரியப் பா
***************************
ஆங்கில மென்னும் அயல்மொழிப் பிடியில்
தூங்கிடும் நிலைமை துகள்துக ளாகத்
தெறிபட வுடைக்கும் செம்மையைத் தருக
நெறியுடன் வாழும் நிலையினில் சேர்த்த
செந்தமிழ்த் தாயே.! செந்தமிழ்த் தாயே.!
வந்தெனக் கோர்வரம் வழங்கிட வேண்டும்
தன்னிக ரில்லாத் தமிழினம்
நன்னிலைப் பெற்றே நனிசிறந் திடவே.




கருத்தூன்றுக.
ஆசிரியப் பா நான்கு வகைப்படும். நேரிசை ஆசிரியப் பா, நிலைமண்டில ஆசிரியப் பா, இணைக்குறள் ஆசிரியப் பா, அடிமறி மண்டில ஆசிரியப் பா.என்பனவாகும்.
பயிற்சியில் கொடுத்துள்ள பாவகை நேரிசை ஆசிரியப் பா ஆகும்.

பொது இலக்கணம்.:
*நான்கு சீர்களைப் பெற்றுவரும்.
*ஆசிரியவுரிச் சீர்களான மாச்சீர், விளச்சீர்களைப் பெற்றுவரும். சில காய்ச்சீர்களும் வரலாம். அவை மாங்காய்ச் சீராக மட்டுமே வரும்.(வாராதிருத்தல் சிறப்பு.)
*மூன்றடி சிற்றெல்லையும், வரையறையில்லாப் பேரெல்லையும் உடையதாய்,
*ஈற்றயலடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்சீராய்,
*இரண்டடிகளுக்கு ஓரெதுகையும், ஒவ்வொரு அடியிலும் பொழிப்பு மோனையும் பெற்று வரும். (முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் அமைவது பொழிப்பு மோனை எனப்படும்.)
*ஈற்றடி ஏகாரத்தில் முடியும். ஓ,ஆ,ஆல் என்றும் வரலாம். ஏகாரமே சிறப்பு.


இவ்வகையிலான நேரிசை ஆசீரியப் பா ஒன்றை வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே எழுதுங்கள். அடி வரையறை.: மூன்றடி குறையாமல், எட்டடிக்கு மிகாமல்.
★★★

*பாவலர் மா.வரதராசன்*

No comments: