பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Sept 2015

பாட்டியற்றுக 4 இன் தொகுப்பு.


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 4 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக: 4


*வெளி விருத்தம்*
1. நடராசன் பாலசுப்பிரமணியன்
கெஞ்சும் தொனியில் குலவி மகிழ்வார் - அரசியலே
விஞ்சும் வகையில் உரைதான் திகழும் - அரசியலே
பஞ்சம் தவிர்க்கப் பதவி பெறுவார் - அரசியலே
நெஞ்சம் சிறிதும் நெகிழார் அதுதான் - அரசியலே.


2. நாகினி கருப்பசாமி
மண்ணின் நலமே மட்கா கொடையே.. வாழ்வாகும்
கண்ணின் மணியாய்க் காக்கும் உயிரே... வாழ்வாகும்
கண்ணின் இசையாய்க் கனியும் பரிவே... வாழ்வாகும்
விண்ணில் இடியாய் வாழ்த்தும் மழையே... வாழ்வாகும்!

3. வெங்கடேசன் சீனிவாச. கோபாலன்

உயிராய்க் கருதி ஊட்டி விடுபவள் – அம்மா
பயிராய்க் கருதிப் பார்த்து வளர்ப்பவள் – அம்மா
தயிராய்க் கலந்தே தந்து மகிழ்பவள் – அம்மா
அயரா துழைத்தே அன்பைச் சுரப்பவள் – அம்மா.!

4. விஜயகுமார் வேல்முருகன்
வருந்தி மனதைக் கலங்கச் செய்யும் -அரக்கன்
அருமை வாழ்வை இழக்கச் செய்யும்- அரக்கன்
பொருந்தும் மனதை தவிக்கச் செய்யும்-அரக்கன்
மருந்தாம் நட்பைக் கொல்லும் சினமே- அரக்கன்!

5. வனராசன் பெரியகண்டர்
நன்றா யிருக்கும் நலமே இனிதாம் - எனச்சொல்வோம்
நன்றே நினைக்கும் உளமே இனிதாம் - எனச்சொல்வோம்
ஒன்றா யிருக்கும் உறவே இனிதாம் - எனச்சொல்வோம்
வென்றே யிருக்கும் திறனே இனிதாம் - எனச்சொல்வோம்.

6. இரா.கி.இராஜேந்திரன்
சொல்லும் பொருளும் பொருந்தும் இலக்கணப் – பயிற்சி
கொள்ளும் வகையில் பாவலர் தருவார்- பயிற்சி
மெல்லவே பயிலுவோம் தினமும் தமிழில்- பயிற்சி
வெல்லவே கவிதை எழுதவே எடுப்போம்-பயிற்சி.

7. வள்ளிமுத்து
நெல்லும் கரும்பும் வயலில் செழிக்கும்- அழகே
புல்லு மரும்பும் வரம்பில் கிளைக்கும் - அழகே
அல்லும் பகலும் வயனீர் நிறைக்கும் - அழகே
செல்லும் மருதம் வழியில் கொழிக்கும்- அழகே.

8. அழகர் சண்முகம்
உண்ணா திருந்தே உழைத்துக் களைத்தோர் -  பலபேர்கள
எண்ணாத் துயர்கண் டெதிர்க்கப் பயந்தோர் - பலபேர்கள்
புண்ணாம் கயமைப் புரட்டால் சிதைந்தோர் - பலபேர்கள்
மண்ணாண் டவரும் மதுவா லழிந்தோர் - பலபேர்கள்.

9. நிறோஸ் ஜி.அரவிந்த்

வாராகி அன்னையே வந்தனை ஏற்றிடுவாள் - இக்கணம்
வாராகி அன்னையே வந்திகல் கூட்டிடுவாள் - இக்கணம்
வாராகி அன்னையே வஞ்சனை மாற்றிடுவாள் - இக்கணம்
வாராகி அன்னையே வந்தருள் தந்திடுவாள் - இக்கணம்.

10. அர.விவேகானந்தன்

அல்லும் பகலும் அழைத்தேன் வருவாய்-திருமாலே
வெல்லும் வகையாய் வரமே தருவாய்-திருமாலே
சொல்லும் மனதில் சுகத்தை சொரிவாய்-திருமாலே
வல்லோர் மனையில் வளத்தை அருள்வாய் -திருமாலே.

11. .Ashfa Asraf Ali
நல்லோ ரிடையே நட்பை வளர்ப்போம் - நாளெல்லாம்
பொல்லா தவரைத் தவிர்த்தே வாழ்வோம் - நாளெல்லாம்
இல்லா தாருக் கீந்தே மகிழ்வோம் - நாளெல்லாம்
நல்லோ னெனவே நானிலம் போற்றும் - நாளெல்லாம்.

12. பத்மநாபன் பட்டாபு.
அடிமறி மண்டிலவெளிவிருத்தம்
இன்பமும் நீயே எளிமையும் நீயே- தமிழே!
கன்னலும் நீயே கவிதையும் நீயே- தமிழே!
தென்றலும் நீயே தீஞ்சுவை நீயே- தமிழே!
என்னுயிர் நீயே என்னுடல் நீயே - தமிழே!

13. பாவலர் பசுபதி
சிங்களம் ஆண்ட சிங்களத் தமிழர்-மாண்டனரே
தங்கள் நாட்டின் தன்னாட் சிக்காய்-மாண்டனரே!
தன்னலம் கொண்ட தமிழர் சிலரால்-மாண்டனரே!
இந்தியத் தமிழர் ஆட்சிப் பிழையால்-மாண்டனரே!

14. கலாம் ஷேக் அப்துல் காதிர்
கற்பவர் வியந்திடும் தெளிவுகள் தருவது -அறிவாகும்
அற்புத மறைகளின் உரைகளால் பெறுவது - அறிவாகும்
நற்குண மலர்களை மணக்கவே செய்வது -அறிவாகும்
சொற்களி லினிமையைக் கலப்பதால் கிடைப்பது - அறிவாகும்.

15. தமிழகழ்வன் சுப்பிரமணி

மொழிப்போ ரைத்தொ டங்குந் தலைவ - மடமோடி
மொழியென் றாலென்? மொழிவா யறியா - மடமோடி
விழியாய் விளங்கு வைநீ என்றார் - மடமோடி
விழியைப் பிடுங்கு மிழிசெய் கையேன்? - மடமோடி.

16. Sara bass
அன்பும் பண்பும் அள்ளித் தந்தாய் --- நான்வாழ
அன்னை உன்னை அகிலம் போற்றும் --- நான்வாழ
என்னை பெற்ற என்றன் தெய்வம் --- நான்வாழ
மன்றில் நானும் மகவாய் பிறந்தேன் ---நான்வாழ .

17. சீராளன்
சிந்தை இனிக்கச் சினத்தை அறுக்கும் - காதல்தான்
முந்தை வினையும் முளையில் நறுக்கும் - காதல்தான்
மந்தம் போக்கும் மயக்கம் குறுக்கும் - காதல்தான்
கந்தம் கமழும் கம்பன் கவிக்கும் - காதல்தான்.

18. விவேக் பாரதி
தேவி நாமமே தெவிட்டா மாமருந்து - இங்கவளால்
பாவம் யாவுமே பாழ்பட்டு ஓடுமே - இங்கவளால்
தாவி நன்மையும் தான்வந்து சூழுமே - இங்கவளால்
மேவும் வாழ்விலே மேன்மிகு ஞானமே - இங்கவளால்.

19. சிதம்பரம் சு.மோகன்
காலிரண்டும் தள்ளாடும்; கையோ நடுநடுங்கும் - மனிதா
கோல விழிவெந்தே பார்வை குருடாகும் - மனிதா
மாதவளும் பாலகரும் அச்சமுற வாழ்வாயோ - மனிதா
பாதை தவறவைக்கும் போதையால் யாதுபயன் - மனிதா .!

★★★★★

1 comment:

சீராளன்.வீ said...

வணக்கம் பாவலரே !

தங்கள் பணி சிறக்க நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !