பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

23 Sept 2015

யாப்பறிவோம்---2;1



யாப்பறிவோம்---2;1

1.யாப்பிலக்கணம் என்றால் என்ன? விளக்குக
தமிழ்மொழியின் இலக்கணம் ஐவகையாகப் பாகுபடுத்தப்படுகிறது. 1.எழுத்திலக்கணம் 
2.சொல்லிலக்கணம் 
3.பொருளிலக்கணம் 
4.யாப்பிலக்கணம் 
5. அணியிலக்கணம்.

இவற்றுள் யாப்பிலக்கணம் தமிழில் மரபுப்பாக்களை இயற்றுவதற்கு பயன்படும் இலக்கணம் ஆகும்.
தமிழ்மொழியின் இலக்கியக்கட்டமைப்பை, பாட்டின் ஓசை ஒழுங்குகளை யாப்பிலக்கணம் வரையறை செய்கிறது.



2.தமிழில் யாப்பலக்கணம் பற்றிக்கூறும் கூறும் நூல்கள் யாவை?
01.தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியல்
     (இது யாப்பியல்  என்றும் அழைக்கப்பட்டது) 
02.அவிநயம் 
03.காக்கைபாடினியம்.                                                                                                   04.அமுதசாகரம் 
05.யாப்பருங்கலம் 
06.யாப்பருங்கலக்காரிகை   
07.வீரசோழியம் 8.யாப்பதிகாரம் 
09.இலக்கணவிளக்கம்-செய்யுளியல்
10.முத்துவீரியம்-யாப்பதிகாரம் 
11.சுவாமிநாதம்-யாப்பதிகாரம் 
12. விருத்தப்பாவினம் 
13.சிந்துப்பாவியல் 
14.யாப்பதிகாரம் 
(புலவர்குழந்தை) பாப்பாவினம் முதலான நூல்கள்(இவை எனக்குத் தெரிந்த அளவில்) பாட்டியல் நூல்கள் தனியே அமைவன.

3.யாப்பினைக் கற்றுக்கொள்ள இப்போது துணைநிற்கும் பண்டைய 
    நூல்கள்   யாவை?
        1.யாப்பருங்கலம் 2. யாப்பருங்கலக் காரிகை

4.இவை இரண்டு நூல்கள் பற்றியதொரு சிறுகுறிப்பினை வரைக
1.யாப்பருங்கலம்
கி.பி10ஆம்நுõற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் “யாப்பருங்கலம்“ யாப்புக்கான முதல் பெரியநூலாகும். “கலம்“ என்ற சொல்லுக்கு இருநிலைகளில் பொருள் கொண்டு யாப்பாகிய செய்யுளுக்கு அணிகலன் போன்றமைவது என்றும் யாப்பாகிய கடலைக் கடக்க உதவும் கலம் என்றும் கூறலாம்.
இதன் ஆசிரியர் அமிர்தசாகரர். இவரே யாப்பருங்கலக் காரிகையையும் எழுதினார். உறுப்பியல்,செய்யுளியல், ஒழிபியல் ஆகிய மூன்று இயல்களைக் கொண்டஇந்
நூலில் பாயிரம்,சிறப்புப்பாயிரம் நீங்கலாக 96 நூற்பாக்கள் உள்ளன.
உறுப்பியலில் எழுத்து,அசை,சீர்,தளை,அடி,தொடை ஆகியவை பேசப் படுகின்றன. செய்யுளியலில், நான்கு பாக்கள் பற்றியும் அவற்றின் இனங்கள் பற்றியும் கூறப்படுகின்றன.ஒழிபியலில் மூன்று
நூற்பாக்கள் மட்டுமே உள்ளன. யாப்பருங்கலக்காரிகைக்கு உரையெழுதிய குணசாகரரே யாப்பருங்கலத்திற்கு விருத்தியுரை எழுதியுள்ளார்.
2.யாப்பருங்கலக் காரிகை
காரிகை என்ற சொல்லுக்கு அழகு,அழகான பெண்,கட்டளைக்கலித்துறை முதலான பொருள்கள் உள்ளன.ஆசிரியன் ஒருபெண்ணைக் கற்பனையில் வடித்துக் கொண்டு அவளை முன்னிலைப் படுத்திப்பாடுவதாக இந்நூல் அமைகிறது. நூல் காரிகையாப்பில் அமைந்துள்ளது.உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் ஆகியமூன்று இயல்களுக்கும் பாயிரமும் அவையடக்கமும் நீங்கலாக 41 காரிகைகள் அமைந்துள்ளன.
பாயிரம். ஒருபாடல். அவையடக்கம்.இரண்டுபாடல்கள். இவற்றுள் நேரசையால் ஆன காரிகைகள் 21.,நிரையசையால் ஆன காரிகைகள் 23.
நேரசை காரிகைக்கு ஒற்றை நீக்கிய எழுத்தெண்ணிக்கை16. நிரையசையெனில்17.இவ்வகையால் கணக்கிட்டால் மொத்தம்2908 எழுத்துகள்.
கற்பதற்கு எளிமையான நுõல் என்பதால் யாப்பருங்கலக்காரிகை பல பதிப்புகளைக் கண்டுள்ளது.


6.யாப்பருங்கலத்திற்கும் யாப்பருங்காரிகைக்கும் உள்ளசில வேறு பாடுகளைச் சுட்டுக!
                      யாப்பருங்கலம்                                யாப்பருங்காரிகை
1.நூற்பாவால் அமைந்தது                        1.கட்டளைக் கலித்துறையால்
                                                                                அமைந்தது
2.அவையடக்கம் இல்லை                         2. அவையடக்கம் உண்டு
3.அசைக்கு உறுப்பு 15                                3.அசைக்கு உறுப்பு 13
4. மகடூஉ முன்னிலை இல்லை                4.மகடூஉ முன்னிலை உண்டு
5.மருட்பா வுக்கு இலக்கணம                    5.மருட்பாவுக்கு இலக்கணம்

   கூறப்பட்டுள்ளது                                           கூறப்படவில்லை
6.ஒரு செய்யுளில் பலதொடையும்           6.கூறப்பெறவில்லை
   பல அடியும் வரின் வழங்கும் முறை
   கூறப்பட்டுள்ளது

7.காசு,பிறப்பு என்னும்                                7 சுட்டப்பட்டுள
   வெண்பா வாய்பாடுகள் சுட்டப்

   பட்டில

8.சிந்தியல் வெண்பா வகைகள் .               8 குறிக்கப்பட்டுள
   குறிக்கப்பட்டில


உறுப்பியல்
7.செய்யுள் உறுப்புகள் என்றால் என்ன ? அவையாவை? ஒவ்வொன்றாக விளக்குக
செய்யுள் இயற்றுவதற்கு அடிப்படையாய் அமைந்திடும் உறுப்புகளே செய்யுள் உறுப்புகள் ஆகும்.
மரபுச் செய்யுள் இயற்றப் பயன்படும் இவ்வுறுப்புகளாக அமைவன


1. எழுத்து 2. அசை 3.சீர் 4.தளை 5.அடி 6.தொடை  
ஆகும்.
இவை ஆறும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. இனி நாம்இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்
காரிகையின் முதல்பாடல் பாயிரம்.இப்பாயிரப்பாடலில் தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும் (எந்தப்பொருளைப்பற்றிப் பாடுகிறோம் என்பதன் விளக்கம்) இருக்கும்.
அடுத்தஇரண்டுபாடல்களும் அவையடக்கப் பாடல்கள். பண்டைக் காலத்தில் நுõல் படைக்கும்போது இவ்வாறு வருதல் மரபாகும்

“ஆயிரம் முகத்தான் அகன்ற தாயினும்
பாயிரம் இல்லது பனுவல் இன்றே “ என்றும்
“பருப்பொருட் டாகிய பாயிரம் கேட்டார்க்கு
நுண்பொருட் டாகிய நுõலினிது விளங்கும்“

என்றும் பாயிரத்தின் பெருமைகள் பலபடப் பேசப்பட்டுள்ளன.
நன்னுõலார்
முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்(நன்1)

எனப் பாயிரத்தின் பல்வேறு பெயர்களைப்பட்டியல் இடுவார்.
இப்போது எழுத்தென்பதன் பொதுவான இலக்கணத்ததப் பார்க்கலாம். எனக்குத்தெரிந்தஅளவில் சிலவற்றை இங்கே கூறமுயல்கிறேன்

1.எழுத்து
காரிகை தரும் இலக்கணம்.
காரிகை எண் 4
.
குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயிர் ஆய்தமெய்யே
மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும்
சிறுநுதல் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்!
அறிஞர் உரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே

“ சிறுநுதல் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்!“ என்பது மகடூஉ முன்னிலை.
ஆடூஉ முன்னிலை “ வெற்ப “ “நாட “ என்று வரும்
.
எழுத்தைப் பற்றி நன்னூல் தெளிவாகக் கூறுகிறது.எழுத்தென்பது ஐந்திலக்கணத்தின் முதல் இலக்கணம் ஆதலால் எழுத்தைப்பற்றி விளக்கிட நன்னூலின் துணை அவசியம் ஆகும்.தொல்காப்பியமும் துணைநிற்கும்.
நன்னூல் எழுத்ததிகாரத்தின் இரண்டாம் சூத்திரம் எழுத்தின் இலக்கணத்தை வரையறை செய்கிறது.
மொழிமுதற் காரண மாம்அணுத் திரளொலி
எழுத்தது முதல்சார்(பு) எனவிரு வகைத்தே

இதன்பொருள்..

மொழிக்கு முதற்காரணமாகவும் ஒலிஅணுத்திரளின் காரியமாகவும் வரும் ஒலியே எழுத்தாகும்.
அது முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும்.
எழுத்து எவ்வாறுதோன்றியது என்பதைச்சுருக்கமாகப்பார்க்கலாம்
மனிதன் வாய்வழியாக உண்டாக்கிய ஒலியையே முதலில் தன் எண்ணங்களை உணர்த்தப்பயன்படுத்தினான்.
அதற்குமுன்னதாக அவனுடைய உடல் அசைவுகளே அவனுடைய உணர்வுகளை வெளிப்படுத்தின.
அவை உடல் மொழி (Body language)) எனப்பட்டன.பிறகு அவன்வாயின் வழியாக ஏற்படுத்திய ஒலியின் ஒழுங்கற்றவடிவம் அவன் எண்ணங்களை அடுத்தவர்க்குப் புலப்படுத்தியது. போகப்போக அவ்வொலி ஓர் ஒழுங்கு நிலையைப் பெற்றது இப்பேச்சு தெளிவாகி ஒழுங்கான வடிவம் பெற்ற பின்னர் பேச்சு மொழியானது. ஒலிவடிவத்தில் இருந்தஇப்பேச்சு மொழியைப் பதிவாக மாற்ற எண்ணிய மனிதன் அவற்றைச் சித்திரங்களாக வரையத் தொங்கினான். இன்னும் சீனமொழியின் எழுத்து வடிவங்கள் சித்திரவடிவிலேயே இருப்பது இதற்குச் சான்றாகும்.எனவே ஒலிவடிவ எழுத்து முதலில் தோன்றி அவை எழுதப்படும் சூழல் உருவான போது வரிவடிவ எழுத்துகள் தோன்றின. ஒலிவடிவ எழுத்தை மொழியியலார் ஒலியன்(Phoneme ) என்பர். வரிவடிவ எழுத்துமொழியியலில் (Grapheme) என்றழைக்கப்படும்.
ஒலிவடிவஎழுத்து உருவடிவம்பெற்றதை யாப்பருங்கல விருத்தியில் இடம் பெற்ற ஒரு கலிவிருத்தம் பின்வருமாறு கூறுகிறது
காணப் பட்ட உருவம் எல்லாம்
மாணப் பட்ட வகைமை நாடி
வழுவில் ஓவியன் கைவினை போல
எழுதப் படுவது உருவெழுத் தாகும்

மேலும்
கட்புலன் இல்லாக் கடவுளைக் காட்டும்
சட்டகம் போல செவிப்புல ஒலியை
உட்கொளற் கிடுமுரு பாம்வடி வெழுத்தே

என்ற ஒருபழம்பாடலும் இதைத் தெரிவிக்கிறது
இதைப் பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம்.
வாயொலி---ஒலியின் ஒழுங்கான வடிவம்--- ஒலிவடிவ எழுத்து---வரிவடிவ எழுத்து
இதைத்தான் நன்னுõலார் மொழிக்கு முதற்காரணமாகவும் ஒலிஅணுத்திரளின் காரியமாகவும் வரும் ஒலியே எழுத்தாகும் என்கிறார்.
மனிதன் எழுப்பிய ஒலி மொழிவடிவம்பெற்று அம்மொழி வரிவடிவம் பெற்று வரிவடிவ எழுத்துகள் உண்டாயின.இதற்குப்பன்னெடுங்காலம் ஆகும்.
தொல்காப்பியம் தோன்றிய காலமே இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் எனில் நம் தமிழ் மொழியின் ஒலிவடிவம் எப்போது தோன்றியிருக்கும்?
அந்தஒலிவடிவம் வரிவடிவமாக மாற இன்னும் பல்லாண்டுகள் ஆகியிருக்கும்.வரிவடிவம்தோன்றியபின்னர்
நூல்கள்தோன்றியிருக்கும் செம்மை யுற்ற நுõல்கள் தோன்ற இன்னும் எவ்வளவு ஆண்டுகள் வேண்டியிருந்திருக்கும்?
தொல்காப்பியம் தோன்றிய காலமே இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்மேல் எனில் நந்தமிழ்மொழியின் தொன்மையை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
மேலும் தொல்காப்பியர் “ என்ப “ என்மனார் புலவர்“ எனத் தனது
நூற்பாக்களில் குறிப்பிடும் காரணத்தால் அவருக்கு முன்னரே நன்கு செம்மை வாய்ந்த இலக்கிய இலக்கணநுõல்கள் தமிழில் இருந்திருக்கவேண்டும். களரியாவிரை,முதுநாரை,முதுகுருகு முதலான மறைந்து போன நுõல்கள் பற்றி இறையனார் களவியல் பேசுகிறது.நான் ஏன் இவ்வளவு செய்திகளை இங்கே கூறினேன்?
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி “

என வெண்பாமாலை கூறுவது ஏதோ புனைந்துரை என நினைப்பார்க்கு உண்மை புரிந்திடும்.
இத்தகு சிறப்புகள் வாய்ந்த நம்செந்தமிழை நாம்போற்றுவதும் செந்தமிழ்மரபுகளைக் கட்டிக்காப்பதும் நமது கடமை அல்லவா!
இடையே இவ்வாறு வருவது இலக்கணத்தில் “ இடைப்பிறவரல்“ எனக்கூறித் தப்பித்துக் கொள்கிறேன்.
நன்னூலார் எழுத்து எவ்வாறுதோன்றியது எனக் காரண காரியத்தை விளக்கிக் கூறினார்.
முதலெழுத்து,சார்பெழுத்து என அதன் இரண்டு வகைகளைக் கூறினார். இதைத்தான் நமது மூத்த முதல் ஆசான் தொல்காப்பியர் தொல் காப்பியத்தின்
முதல்
நூற்பாவாக
“ எழுத்தெனப்படுப
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே “

என்கிறார்.(தொல் .எழுத்து.
நூன்.1)
இங்கே உங்களுக்கான ஒருகூடுதல் செய்தியையும் கூறிவிடுகிறேன்.
தொல்காப்பியர் கையாண்ட முதல் சொல் “ எழுத்து“ என்பதாகும். . அவர் கையாண்ட இறுதிச்சொல் “
நூலே “ என்பது.(நுனித்தகு புலவர் கூறிய நூலே-- இறுதி நூற்பாவின் இறுதி அடி(1610))
“எழுத்தினைக் கற்ற ஒருவன் அதன் முடிந்த பயனாகிய நூலை இயற்றவேண்டும்.“ என்பதைத் தொல்காப்பியர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்


தொடரும்....!

No comments: