பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

23 Sept 2015

யாப்பறிவோம்---2;2


தொடர்ச்சி ...!

இதுபோல் வள்ளுவரும் தமிழ்நெடுங்கணக்கின் முதலெழுத்தாகிய அகரத்தில் முதல் குறளைத் தொடங்கி(அகரமுதல) இறுதி எழுத்தாகிய னகரத்தில்
இறுதிக் குறளை( கூடி முயங்கப் பெறின்) முடித்திருக்கிறார்
இன்னொன்றும்
தொல்காப்பியர் கருத்துப்படி எழுத்துகள் 33 ஆகும். முதலெழுத்துகள்30. சார்பெழுத்துகள் 3. ஆகமொத்தம் 33.
தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தின் முதல் இயலாகிய நுõன்மரபில் 33 நுõற்பாக்களை மட்டுமே இயற்றி உள்ளார் என்பது கூடுதல் செய்தி.
அசைக்கு உறுப்பாகும் பதின்மூன்று எழுத்து வகைகளை இம்முதற்காரிகை பட்டியல் இடுகிறது.

1.குறில் 2. நெடில் 3. உயிரெழுத்துகள் 4.குற்றியலிகரம் 5. குற்றியலுகரம் 6.ஐகாரக்குறுக்கம் 7.ஆய்த எழுத்து 8.மெய்யெழுத்துகள் 9.வல்லெழுத்து 10.மெல்லெழுத்து 11.இடையெழுத்து 12.உயிர்மெய் 13.அளபெடை
ஆகிய பதின்மூன்றும் அசைக்கு உறுப்பாகிவரும்.

இனி மாத்திரை அடிப்படையில் எழுத்துகளைப் பார்ப்போம்
எழுத்து மாத்திரை அள வு

01.உயிர்க்குறில்(அ,இ,உ,எ,ஒ) 1
02.உயிர்நெடில்(ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ) 2
03. உயிர்மெய்க்குறில்(உயிர்க்குறில் மேல் ஏறிய 18 மெய்கள்) 1
04. உயிர்மெய்நெடில்(உயிர்நெடில் மேல் ஏறிய 18 மெய்கள்) 2
05.குற்றியலிகரம் அரை
06.குற்றியலுகரம் அரை
07.ஐகாரக்குறுக்கம்(மொழிமுதல்,இடை,கடை)
    (முதல் ஒன்றரை,இடை,கடை.ஒன்று)
08.ஔகாரக்குறுக்கம்(மொழிமுதலில்மட்டும்) ஒன்றரை
09.ஆய்தம் அரை 10. மெய்யெழுத்துகள்(18) அரை
11.உயிரளபெடை 3
12. ஒற்றளபெடை 1
13.ஆய்தக்குறுக்கம் கால்
14.மகரக்குறுக்கம் கால்

அ.மாத்திரை--- விளக்கம்
ஓர் ஒலியெழுத்தை ஒலிப்பதற்கு நாம் இயல்பாக எடுத்துக்கொள்ளும் கால அளவே மாத்திரை ஆகும்.
தொல்காப்பியர்
கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே (தொல் .எழுத்.நுõன் .7) என்கிறார்

நன்னூல்
இயல்பெழு மாந்தர் இமைநொடி மாத்திரை(நன்.100)
என்கிறது.

கண்ணமைக்கும் நேரமும் நொடிக்கும் நேரமும் ஒருமாத்திரையின் அளவாகும்
.
ஆ. உயிர் மெய்
உயிரும்மெய்யும் இணைந்து உருவாகும் எழுத்து உயிர்மெய் எழுத்தாகும்
தொல்காப்பியம்
புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும்
ஏனை உயிரோ டுருவு திரிந் துயிர்த்தலும்
ஆ ஈர் இயல உயிர்த்தல் ஆறே
(தொல்.எழு.நூன்மரபு 17)என்னும்
நன்னூல்
புள்ளிவிட்டு அவ்வொடு முன்னுரு வாகியும்
ஏனை உயிரோடு உரு வு திரிந்தும்
உயிரள வாயதன் வடிவொழித்து இருவயிற்
பெயரொடும் ஒற்றுமுன் னாய்வரும் உயிர்மெய்

(நன் 89)என்னும்
மெய்யின்மேல் உயிர் ஏறிய அகர வரிசை புள்ளியைவிட்ட மெய்யாகத் தோற்றம் அளிக்கும். (க,ங,)
ஏனைய உயிர்களோடு உருவம் மாறித் தோற்றம் அளிக்கும்(கு,கூ, கே,சூ) இங்கு உயிர் மெய் எழுத்துகளின் வரிவடிவம் கூறப்பட்டது.
ஒலிப்புநிலையில் மெய் தன்னுடைய ஒலிப்புத்தன்மையை இழக்காது மாத்திரையை இழந்து இரண்டு பெயராலும் இணைந்து உயிர்பெறும்மாத்திரை அளவே பெற்று
மெய்முன்னாலும் உயிர் பின்னரும் ஒலிப்பில் வரும்( உயிர்மெய்யை ஒலித்து உணர்க)
மனிதராகிய நாமே உயிர் மெய்க் கூட்டுக்கு எடுத்துக்காட்டாகிறோம்.
நம்மையும் உயிர்மெய்யையும் அப்படியே கீழே வருவனவற்றோடு பொருத்திக் கொள்க

உயிர் மெய்
அ. உயிர் தனித்தியங்கவல்லது மெய் தனித்தியங்காது.
ஆ. ஒலிப்புமுறையில் பின்னிருக்கும் முன்னிருக்கும்
இ. மாத்திரை அளவில் தன்னை நிலை தன்னை
      நிறுத்தும் இழந்துவிடும்
ஈ.பிரித்தால் தனித்தியங்கும் தனித்தியங்காது


இதே நிலைகள்தாம் நம் உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பாகும்.
இவ்வாறு உடல்மேல்உயிர்வந்து ஒன்றி இரண்டும் கலந்து மெய் தன் மாத்திரை இழந்து நிற்கும் இந்நிலைக்கு இலக்கண உரையாசிரியப் பெருமக்கள் ஓர் அருமையான எடுத்துக்காட்டைத் தருகின்றனர்
.“ உப்பொடு பெய்த அப்பே போல “ என்பதாகும்
“உப்பொடு கலந்த நீரைப்போல் “ அப்பு - நீர்

மெய்- உப்பு ., உயிர் - நீர்

இ.குற்றியலுகரம்
குற்றியலுகரத்திற்கு நன்னுõல் கூறும் விதி திட்பநுட்பம் சிறந்தது.
தனிநெடில் ஏழு,ஆய்தம் ஒன்று,உயிர் எழுத்துகளுள் சொல்லுக்கு இடையிலும் கடையிலும் வாராத ஔகாரம் நீக்கிய உயிர் பதினொன்றும் வல்லெழுத்தாறும் மெல்லெழுத்தாறும் வல்லெழுத்துகளோடு தொடராத வகர நீக்கிய இடையெழுத்தைந்தும் ஆகிய 36 எழுத்துகளுள்
ஒன்றினால் ஈற்றயல் அயல்எழுத்தாகத் தொடரப்பட்டு மொழியிறுதியில் வல்லினஎழுத்துகள் யாதானும் ஒன்றின் மேல் வரும் உகரம் தன்மாத்திரையில் குறுகி ஒலித்துக் குற்றியலுகரம் ஆகும்
நெடிலோடு ஆய்தம் உயிர் வலி மெலியிடைத்
தொடர்மொழி இறுதி வன்மையூர் உகரம்
அஃகும் பிறமேற் தொடர வும் பெறுமே
(நன்94)
எ.டு நாகு - நெடில்தொடர்
எஃகு - ஆய்தத்தொடர்
வரகு- உயிர்த்தொடர்
பட்டு - வன்றொடர்
நுங்கு -மென்றொடர்
மார்பு - இடைத்தொடர்

குற்றியலுகரம்தான் மரபுச் செய்யுளை இயற்றும் போது மிக்குப் பயன்படும்.
குறிப்பாக வெண்பாக்களை இயற்றும்போது குற்றியலுகரம் நிலைமொழி இறுதியில் நிற்கும் உயிர்மேல் ஏறித் தளைதட்டும்.
அங்கே குற்றியலுகரத்தைக் கவனமுடன் கையாள வேண்டும்.ஏனைய பாக்களில் சிறுபான்மை தளை தட்டும்.
வெண்பா ஈற்றடியில் இடம்பெறும் காசு,பிறப்பு ஆகிய இரண்டும் குற்றியலுகரங்களே. வெண்பா ஈற்றுச் சீர் இவ்வாய்ப்பாட்டில் முடிவதானால் குற்றியலுகரத்தில்தான் முடிய வேண்டும்.
ஒரோவழி(அருகி) முற்றியலுகரத்திலும் முடியலாம்

.
ஈ.குற்றியலிகரம்
1.நிலைமொழி ஈற்றில் நிற்கும் குற்றியலுகரங்கள் வருமொழி முதலில் யகரம் வரக் குற்றியலிகரங்களாக மாறும்
2. “மியா“ எனும் அசைச்சொல் வருமொழியாக வரும்போது மகரத்தின்மேல் ஏறிநின்ற இகரம் குறுகும்.
நன்னுõல்
“ யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும்
அசைச்சொன் மியாவின் இகரமும் குறிய
(நன் 93)
என்கிறார்.
எ.டு நாகு+ யாது- நாகியாது
கேண்மியா
உ.ஐகாரக்குறுக்கம்
ஐகாரக்குறுக்கம் மொழிமுதல்,இடை,கடைஆகிய மூவிடத்தும் வரும்
ஊ.முற்றாய்தம்
ஆய்தம் ஒருசொல்லுக்கு இடையில்தான் வரும்
நன்னூலார்
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே
(நன் 90) எனத்
தொல்காப்பிய னூற்பாவை அப்படியே எடுத்தாண்டுள்ளார்.
ஆய்தம் குற்றெழுத்தின் முன் உயிரோடு கூடிய வல்லெழுத்தாறின்மேல் ஊர்ந்து வரும்.
எ.டு எஃகு, கஃசு
ஆய்தம் தனித்தியங்காது. ஒருபறவையானது பறக்கவேண்டுமெனில் அதன்இருபக்கங்களிலும் உள்ள சிறகுகள் இயங்கினால் தான் பறவை மேலெழ முடியும். அதேபோல்தான் ஆய்த எழுத்தின் நிலை. இருபக்கங்களிலும் உள்ள எழுத்துகளின் துணையோடு ஒலிக்கப்படும். இதைஇலக்கண உரையாசிரியர்
“ இருசிறகது எழுப்ப எழும் உடல்போல் “ என்பர்
ஆய்தம் இடத்தைப் பொறுத்து அலகு பெறுவதும் உண்டு. பெறாமல் போவதும் உண்டு. வேறுவகையாகக் கூறினால் ஒற்றாக வரும்.,உயிராகவும் வரும்.வள்ளுவர் இரண்டு நிலைகளிலும
எடுத்தாண்டுள்ளார். தளையைப்பார்க்கும் போது விரிவாகப் பார்க்கலாம்.

எ.அளபெடை.
இரண்டுவகைப்படும்
1. உயிரளபெடை
2. ஒற்றளபெடை
உயிரளபெடை
தொல் காப்பியர்
குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே
(எழுத் .மொழி.8)
என்கிறார்
நன்னூல்
இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலைநெடில்
அளபெழும் அவற்றவற் றினக்குறில் குறியே
(91) என்கிறது
செய்யுளில் தளைதட்டும்போது நெடிலெழுத்து அளபெடுத்து ஒலிக்கும் இசைநிறை அல்லது செய்யுளிசை அளபெடையைத் தான் இருவரும் கூறுகின்றனர். தளைதட்டும்போது மட்டுமே இவ்வளபெடை பயன்படும். பெரும்பாலும் தளையை உறுதியாகப் பற்றிநிற்கும் வெண்பாக்களில் இதன்பயன்பாடு மிகுந்து வரும். ஏனைய பாக்களிலும் பாவகைகளிலும் தேவைக்கேற்ப அருகியே சில இடங்களில் வரும். தளையைப் பற்றிப்பார்க்கும் போது விரிவாக நோக்கலாம்.
இன்னிசை அளபெடை,சொல்லிசை அளபெடை என்ற இரண்டு அளபெடைகளும் உண்டு.இன்னிசை அளபெடை தளைதட்டாத இடத்திலும் ஓசை நயத்திற்காக வரும்.
சில மரூஉ முடிபுகள் சொல்லிசை அளபெடைகளாகும்.
எ.டு. கண்ணேஎ என்றான் கனிமொழியே என்றான் (வெண்டளைக்காக கண்ணே எனும் சொல் அளபெடுத்து கண்ணேஎ என்றானது.இசைநிறை)
எடுப்பதூ உம்(குறள் இன்னிசை)
குரீஇ,மரீஇ(சொல்லிசை)

ஏ.ஒற்றளபெடை
இசையை நிறைக்க மட்டுமே ஒற்று அளபெடுக்கும். மெல்லின ஒற்றுகள்,இடையினத்தில் ரகர,ழகரம் விடுத்த வ,ய,ல,ள ஆகிய நான்கு ஒற்றுகளும் ஆய்தம் ஆகியன சேர்த்த பதினோரெழுத்தும்
அளபெடுக்கும்.
2.எழுத்துகளின் எண்ணிக்கை
உயிர் 12
மெய் 18
உயிர்மெய்(உயிரும் மெய்யும் முரண) 216
ஆய்தம் 1
மொத்தம் 247
3.இனவெழுத்துகள்
தமிழ் நெடுங்கணக்கில் உயிரெழுத்துகள் இன்றியமையா இடத்தைப்பெறுவன. தனித்தியங்க வல்லன. மெய்யெழுத்துகள் இவற்றைச்சார்ந்தே இயங்குவன. அதாவது நம்முடைய உயிரும் உடலும் போல். எழுத்துகளை ஒலிக்கும் போது அவை தோன்றும் இடம்(Origin), ஒலிக்கும் முயற்சி(Articulation),ஒலிக்கும் கால அளவு(Time) ,உருவம் முதலானவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் இனவெழுத்துகள் ஆகும்.
ஒலிப்பான்(Articulator), ஒலிக்குமுறை(Manner of articulation) ஒலிப்பிடம்(Point of articulation) இவற்றை அடிப்படையாகக் கொண்டு உயிரெழுத்துகளை இருபெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
இதழ் குவியா உயிர்கள்(Unrounded vowels),இதழ்குவி உயிர்கள்.(Rounded vowels) இதழ் குவியா உயிர்களை மேலும் இரண்டுபிரிவுகளாகப்பகுக்கலாம்.
அவை.
1.பின்னுயிர்கள் 2.அதற்கு அடுத்துத் தோன்றும் முன்னுயிர்கள்(அல்லது) நடு உயிர்கள்.
இவற்றை உயிர் முக்கோணம் என்பர்(Vowel triangle)

அ இ
என இடலாம் .



என்றும் வைக்கலாம். அடிப்படை உயிர்கள் அ,இ,உ ஆகும்.
மற்றஎழுத்துக்கள் இம்மூன்றெழுத்துகளின் இனமாகும்.
1.அ,ஆ ,ஐ,(இப்போது அய்)ஔ(இப்போது அவ்)இவை நான்கும் ஓரினம்
2.இ,ஈ,எ,ஏ இவை நான்கும் ஓரினம்
3.உ,ஊ,ஒ,ஓ இவை நான்கும் ஓரினம்(இதழ்குவிஉயிர்கள்)
4. வல்லினத்திற்கு மெல்லினம் இனவெழுத்துகள்
5.இடையினத்திற்கு இனவெழுத்து இல்லை.
6. ஆய்தம் தனித்தியங்காது.இடத்தைப் பொறுத்து ஒற்றாகும்.உயிரும் ஆகும்

இவற்றின் ஒலிப்பான் ஒலிப்பிடம் ஆகியவை ஒன்றே.ஒலிப்புமுறையில் சற்றே வேறுபடும்.
எனவே இந்த வரிசையில் பாடல்களில் எழுத்துகள்இடம்பெறும் போது அழகான ஓசை உண்டாகும்.இப்போது உங்களுக்குப்புரியும் என் நினைக்கிறேன்
காரிகை “ எழுவாய் எழுத்தொன்றின்மோனை “ என்னும். முதலெழுத்து ஒன்றுவது மோனை.இரண்டாம் எழுத்து ஒன்றுவது எதுகை.
அவ்வளவே
அவற்றோடு மெய் கலந்து உயிர்மெய் ஆகும்போது இதே வரிசை தான். மோனை ,எதுகையைப் பற்றிப்பார்க்கும் போது விரிவாகப் பார்க்கலாம்.
ஐகாரமும் ஔகாரமும் கூட்டெழுத்துகள்(அ) சந்தியக்கரங்கள் ஆகும்(Diphthongs) அவை முறையே அய் ,அவ் என்று இன்று எழுதப்படுகின்றன
.
பாடலில் பொருளே இல்லாமல் வெறும்ஓசைமட்டும் சிறப்பாக அமைந்துவிட்டால் அந்தப்பாடலுக்கும் ஏற்றம் உண்டென்பது அவ்வையின்கருத்து(இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று)
காரிகை அசைக்கு உறுப்பாகும் எழுத்துகள் இவையெனப்பட்டியல் இட்டபோதும் ஐந்தலக்கணத்தின் முதல்இலக்கணமாகிய எழுத்தைப் பற்றி விரிவாகப் பேசுபவை தொல்காப்பியமும் நன்னுõலும் ஆகும். அவற்றின் துணையின்றி எழுத்துகளைப் பற்றி முழுமையாக அறிய இயலாது. எனவே இவையிரண்டும் நமக்கு உறுதுணையாயின. சொல்லுக்கும் இவையே துணைநிற்கும்
அசைக்கு உறுப்பாகும் எழுத்துகளைப் பற்றி ஓரளவு பார்த்துவிட்டோம் என எண்ணுகிறேன்
.
குறைகள் இருப்பின் என்னிடம் கூறுங்கள்.
நிறையிருப்பின் அதுவே என் பேறு
.
எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும் - மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதல்நூல் பொருளறிந்து
கட்டறுத்து வீடு பெறும்
(பழம் வெண்பாப்பாடல்)

காரிகை சொன்ன கவினார் எழுத்தினை
நாரினும் புல்லிய நாயேன் விளக்கினேன்
நல்லதைக் கொள்ளுங்கள் அல்லதைத் தள்ளுங்கள்
பல்காலும் சொன்னேன் பணிந்து
( இது என்பாடல்)

No comments: